என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகம் கலவர பூமியாகிவிட்டது: ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு..!
    X

    தமிழகம் கலவர பூமியாகிவிட்டது: ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அதிமுக ஆட்சியில் மதச்சண்டை சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது.
    • அதிமுக ஜாதி, மதம் இல்லாத கட்சி. ஆண், பெண் இரண்டே ஜாதிதான்.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட ரோமன் கத்தோலிக தேவாலயம் அருகே கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இன்றைய தினம் திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதம் ஆகிறது. வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. 525 அறிவிப்புகளில் 10% மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிட்டு விழி பிதுங்கி நிற்கிறார் ஸ்டாலின்.

    திமுக தேர்தல் அறிக்கையில் சொத்து வரி உயர்த்த மாட்டோம் என்று சொன்னார்கள், ஆனால் வரிகளை எல்லாம் உயர்த்திவிட்டனர். மின்கட்டணம் குறித்து கேட்க வேண்டிய அவசியமே இல்லை, 67% உயர்த்திவிட்டனர். இப்படி மக்கள் மீது சுமை சுமத்துகின்ற அரசு தேவையா? அதிமுக ஆட்சி இருந்தபோது வறட்சி, புயல், கொரோனா காலத்தில் கூட சிறப்பாக செயல்பட்டு விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம். இன்று புயல் இல்லை, வெள்ளம் இல்லை, வறட்சி இல்லை, கொரோனா இல்லை ஆனால் விலை உயர்கிறது. காரணம் என்னவென்றால் பொம்மை முதல்வர்.

    அரிசி, பருப்பு, எண்ணெய் விலையை ஒப்பிட்டுப்பாருங்கள். வருமானம் குறைந்து விலை உயர்ந்துவிட்டது. திமுக கட்சியல்ல, கார்ப்பரேட் கம்பெனி. ஸ்டாலின் சேர்மன், மற்றவர்கள் இயக்குனர்கள். ஸ்டாலினை அடுத்து உதயநிதியை கொண்டுவர முயல்கிறார்கள், அது நடக்காது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டு ஜனநாயக நாடாகிவிட்டது. இங்கும் எல்லோருக்கும் ஆள்வதற்கு உரிமையுண்டு. இங்கே இங்கிருக்கிறவர்கள் கூட முதல்வராகலாம்.

    அதிமுகவில் மட்டும் யார் வேண்டுமானாலும் அதிகாரத்துக்கு வரலாம். திமுகவில் அந்த குடும்பத்தினர் மட்டும்தான் வர முடியும். எங்கள் குடும்பத்தை தவிர்த்து எவரேனும் தலைவர் பதவிக்கு வரலாம் என்று ஒரு வார்த்தை அவர்களைச் சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த குடும்ப ஆட்சிக்கு 2026 தேர்தல் முற்றுப்புள்ளி வைக்கும்.

    எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. பத்திரப்பதிவில் அதிகளவு லஞ்சம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் கடும் பாதிப்பு. டாஸ்மாக் ஊழல், யார் அதுக்கு மந்திரியாக இருந்தது என்றால், 10 ரூபாய் பாலாஜி. அவர்தான் புதிய டெக்னிக் கண்டுபிடித்தார். பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூல். ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் வருமானம் மேலிடத்துக்குப் போகிறது. வருடத்துக்கு 5400 கோடி ரூபாய் கொள்ளையடிக்கும் கட்சி தேவையா?

    அண்மையில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி 1000 கோடி ஊழல் என்றார்கள், அதில் மேலும் 40 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. திமுக ஆட்சியில் எந்த துறையும் சரியாக செயல்படவில்லை, டாஸ்மாக் மட்டும்தான் செயல்படுகிறது. அதில் அதிக வருமானம். எனவே அதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

    அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டோம். மருத்துவத் துறையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 400 கோடி ரூபாயில் கொண்டுவந்தோம். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம். ஏழைகள் நிறைந்த பகுதியில் அற்புதமான சிகிச்சை கிடைப்பதற்கு கொண்டு வந்தோம். இது ஒரு வரலாற்று சாதனை. இப்படி மக்களுக்கு சேவை செய்த இயக்கம் அதிமுக.

    இந்தப்பகுதி பின் தங்கிய பகுதி. அதிமுக ஆட்சியில் 75 கோடியில் சட்டக் கல்லூரி கொண்டு வந்தோம். தேவையான கல்வியை கொடுத்தோம். திமுக ஆட்சியில் ஒரு திட்டமாவது கொண்டு வந்தார்களா? இந்திய வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தது அதிமுக அரசுதான். கல்வியில் புரட்சி செய்திருக்கிறோம். பள்ளிக்கல்வி, உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கினோம். 17 மருத்துவக்கல்லூரி, 67 கலைக்கல்லூரி, 7 சட்டக்கல்லூரி இப்படி ஏராளமான கல்லூரியைத் திறந்து ஏழை மாணவர்கள் குறைந்த செலவில் பட்டப்படிப்பு படிக்கும் சூழல் உருவாக்கினோம்.

    இது வறட்சி மாவட்டம். இந்தப் பகுதியிலும் கண்மாய் நிரம்புவதற்காக காவிரி- குண்டாறு திட்டம் கொண்டுவந்தோம். பசுமையாக செழிமையாக மாற்ற முயற்சித்தோம். 14,400 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தினோம். தமிழக வரலாற்றில் இவ்வளவு நிதி மாநில அரசால் ஒதுக்கப்பட்டது கிடையாது. இந்த திட்டத்தால் அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதால் விடியா திமுக அரசு இதனை கைவிட்டது. அடுத்து அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததும் மீண்டும் காவிரி- குண்டாறு திட்டம் தொடங்கப்படும்.

    விவசாயிகளுக்கு இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி, மும்முனை மின்சாரம், பயிர்க் காப்பீடு மூலம் அதிக இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் 540 கோடி பெற்றுக்கொடுத்தோம். மீனவர்களுக்கும் நிறைய திட்டம் கொடுத்தோம். விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலை டீசல், மீன்பிடி தடைக்காலம் மானியம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் டீசல் மானியம் உயர்த்தப்படும்.

    நான்காண்டுகளில் கடலோர கிராமத்தைச் சேர்ந்த 11 மீனவ கிராமங்களுக்கு 321 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தடுக்க ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகளை கட்ட 286 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. வர்தா புயல், ஒக்கி புயல் நிவாரணம் 5000 ரூபாய், இறந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய், படகுகள், வலைகள் சேதத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய், 167 மீனவர்கள் இலங்கையில் மீட்பு, 806 மீனவர்களை இலங்கை சிறையில் இருந்தும், 96 பேர் ஈரான், 11 பேர் அபுதாபி, 28 பேர் கத்தார் சிறையில் இருந்தும் விடுவிக்கப்பட்டு தமிழகம் அழைத்துவந்தோம். 85 கோடியில் 5000 வீடுகள் கட்டிக்கொடுத்தோம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    கச்சத்தீவை மீட்க வேண்டும் என்கிறார்கள் திமுகவினர். அது காங்கிரஸ் ஆட்சியில்தான் தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவை கொடுத்ததே அவர்கள்தான், இப்போது மீட்பு பற்றி பேசுவதும் அவர்கள்தான். அம்மா அவர்கள் கச்சத்தீவை மீட்க தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. திமுக மத்திய அரசில் 16 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தது. அப்போதெல்லாம் மீனவர்கள் பற்றி கவலைப்படவில்லை. அடுத்தாண்டு தேர்தல் வருவதால் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின். மீனவர்களின் வாக்குகளைப் பெற ஏமாற்றுகிறார். மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுப்போம்.

    அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு 49 கோடி நிதி ஒதுக்கி திட்ட அறிக்கை தயாரித்தோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் அதை கிடப்பில் போட்டு 17 கோடியில் கட்டி, கடைகளை எல்லாம் திமுகவினரே எடுத்துக்கொண்டனர். நகராட்சியில் வீடு, கடை கட்டினால் 1000 சதுரடிக்கு 37 ஆயிரம் ரூபாய், திமுக ஆட்சியில் 74 ஆயிரம் ரூபாயாக 100% உயர்த்திவிட்டனர்.

    இது, இஸ்லாமிய மக்கள் நிறைந்த பகுதி. திமுக கூட்டணிதான் சிறுபான்மை பாதுகாப்பு என்று மாயத் தோற்றம் காட்டுகிறார்கள். உண்மையிலேயே பாதுகாப்பு கொடுத்தது அதிமுகதான். அதிமுக ஆட்சியில் மதச்சண்டை சாதிச்சண்டை இல்லை, இப்போது கலவர பூமியாகிவிட்டது. அதிமுக ஜாதி, மதம் இல்லாத கட்சி. ஆண், பெண் இரண்டே ஜாதிதான்.

    அதிமுக ஆட்சியில் ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி கொடுத்தோம். ஹஜ் மானியம் 12 கோடி கொடுத்தோம். ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி, ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு, உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம், வக்ஃப் வாரிய ஆண்டு நிர்வாக மானியம், பள்ளி தர்காக்களுக்கு புனரமைப்பு நிதி எல்லாம் கொடுத்தோம். இந்த மண்ணின் மைந்தர் அப்துல் கலாமை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெற வைத்தோம். ஆனால் திமுக எதிர்த்து ஓட்டுப்போட்டனர். இவர்களா உங்களை காப்பாற்றுவார்கள்? இதிலிருந்து யார் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலராக இருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.

    கொரோனா காலத்தில் மாணவர் நலனை காக்க ஆல் பாஸ் போட்டோம். இப்படி மாணவர், தொழிலாளி, விவசாயி, மீனவர், நெசவாளர், எல்லா தரப்பு மக்களுக்கு நன்மை செய்த ஒரே அரசு அதிமுக அரசு. ஆகவே தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகம் மீட்போம். பை பை ஸ்டாலின்

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    Next Story
    ×