தமிழ்நாடு செய்திகள்

எம்புரான் திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் போராட்டம்- தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
- எம்புரான் திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல்வேறு சர்ச்சை கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக செய்திகள் பரவியது.
- திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
கூடலூர்:
மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல்வேறு சர்ச்சை கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக செய்திகள் பரவியது. குறிப்பாக குஜராத் கலவரம் தொடர்பாக காட்சிகள் வைக்கப்பட்டதால் வலதுசாரி அமைப்புகள் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் வெடிக்கும் எனவும் தெரிவித்தனர்.
அதன்பின் சர்ச்சைக்குரிய 17 காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் படம் திரையிடப்படுவதாக படக்குழு அறிவித்தது. இருந்தபோதும் இந்த படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த கருத்துகள் இடம் பெற்றுள்ளது என்றும், அதனை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் எம்புரான் படம் திரையிட்ட தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில்,
இந்த திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து ஏற்கனவே நாங்கள் அறிக்கை வெளியிட்டு படக்குழுவினரிடம் அதனை நீக்க வலியுறுத்தினோம். இதுவரை நீக்கப்படவில்லை. ஆனால் வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக 17 காட்சிகளை நீக்கி திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர் .அப்படியானால் தமிழக விவசாயிகளின் உணர்வுக்கு மதிப்பு இல்லையா? தமிழினத்திற்கு எதிரான கருத்துகளை உமிழும் வகையில் திரைப்படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு இந்த திரைப்படத்தை தணிக்கை செய்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்றார்.