தமிழ்நாடு செய்திகள்

3 பேர் உயிரிழப்புக்கு குடிநீர் காரணமல்ல - திருச்சி மாநகராட்சி ஆணையர் விளக்கம்
- உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டதன் மூலம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது
- அந்த பகுதியில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் மின்னப்பன்தெரு, பனிக்கன்தெரு, காமாட்சி அம்மன் தெரு, நெசவாளர் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக கூறி அந்த பகுதி பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர்.
பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று குடிநீர் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.
இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலரிடம் புகார் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 4½ வயது பெண் குழந்தை மற்றும் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிர் இழந்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணன் கூறுகையில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து இறந்ததாக கூறப்படும் 4½ வயது குழந்தை வண்ணாங்கோவில் பகுதியில் பாரம்பரிய முறையில் ஓதல், வயிற்று தொக்கு நீக்குதல் சிகிச்சை வழங்கப்பட்டதால் ஒவ்வாமை ஏற்பட்டு இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் கோவில் திருவிழாவின்போது நடைபெற்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டதன் மூலம் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் எந்திரங்களை கொண்டு, குடிநீர் வினியோகம் செய்யும் குழாயில் ஆய்வு மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும் அந்த பகுதியில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பகுதிகளில் வயிற்றுப்போக்கு உண்டான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மாநகராட்சி மருத்துவமனைகளை அணுகுமாறு கேட்டுக்கெள்ளப்படுகிறது என்றார்.