தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்: வருகிற 3-ந்தேதி தமிழகம் முழுவதும் நடக்கிறது
- தமிழகம் முழுவதும் உள்ள பூத் முகவர்கள் விவரம் புகைப்படத்தோடு பிரத்யேக செயலியில் இணைக்கப்பட்டுள்ளது.
- கட்சித் தலைவர் விஜய் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் வீடியோ காலில் பேசி ஆலோசனை செய்கிறார்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்காக 'மை டி.வி.கே.' என்ற பிரத்யேக செயலியை த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 30-ந்தேதி அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு செயலி மூலம் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் கட்சித் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுமார் 69 ஆயிரம் பூத் முகவர்களை நியமனம் செய்துள்ளார்.
பூத் கமிட்டி உறுப்பினர்கள் தினந்தோறும் அந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று த.வெ.க. கொள்கைகள் மற்றும் வருங்கால முதல்வர் வேட்பாளர் விஜய் என்பதையும் மக்களிடையே பிரசாரம் செய்து வருகின்றனர். இது மட்டுமின்றி தொகுதியில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளையும் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரச்சனைகளை தீர்க்க கோரி மனு செய்து வருகின்றனர்.
தீர்க்கப்படாதபட்சத்தில் த.வெ.க. சார்பில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பூத் முகவர்கள் விவரம் புகைப்படத்தோடு பிரத்யேக செயலியில் இணைக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர் விஜய் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் வீடியோ காலில் பேசி ஆலோசனை செய்கிறார். மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பூத் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
இந்நிலையில் த.வெ.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 3-ந்தேதி சுமார் 80 மாவட்டங்களில் நடக்கிறது. கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு வாக்குச்சாவடியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வாக்காளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது உள்பட 2026 தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் பற்றி தீவிரமாக ஆலோசனை நடைபெற இருக்கிறது.
பூத் முகவர்களாக அந்தந்த பகுதியில் இருப்பவர்களே நியமனம் செய்யப்பட்டுள்ளதால் ஒரு வீடு விடாமல் இரவு-பகல் பாராமல் த.வெ.க.வினர் பணியாற்றி வருகின்றனர்.
கூட்ட ஏற்பாடுகளை கட்சித் தலைவர் விஜய் உத்தரவின்படி, பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தலின்படி 234 தொகுதிகளிலும் தீவிரமாக செய்து வருகின்றனர்.