தமிழ்நாடு செய்திகள்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நாமக்கல் வருகை
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் இருந்து நாமக்கல் சுற்றுலா மாளிகை வரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- அரசு நலத்திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ.131 கோடியே 36 லட்சம் ஆகும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை 6 மணி அளவில் கரூரில் இருந்து நாமக்கல் வருகை தர உள்ளார்.
அவருக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட எல்லையான ராசாம்பாளையம் சுங்கசாவடி அருகில் மாவட்ட நிர்வாகம் சார்பாக கலெக்டர் துர்காமூர்த்தி சிறப்பான வரவேற்பு அளிக்கிறார். அதே போல தி.மு.க. சார்பாக நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் இருந்து நாமக்கல் சுற்றுலா மாளிகை வரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
தொடர்ந்து நாளை அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.87.38 கோடியில் 139 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.10.80 கோடியில் முடிவுற்ற 36 திட்டப்பணிகளை திறந்து வைப்பதோடு, பல்வேறு துறைகளின் சார்பில் 2,001 பயனாளிகளுக்கு ரூ.33.18 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். அரசு நலத்திட்டங்களின் மொத்த மதிப்பீடு ரூ.131 கோடியே 36 லட்சம் ஆகும்.
தொடர்ந்து நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் நகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதற்கட்டமாக பட்டாக்கள் மற்றும் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்க உள்ளார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன விளையாட்டு உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைக்க உள்ளார்.