தமிழ்நாடு செய்திகள்

ஆணவப்படுகொலை: கவின் பக்கம்தான் நீங்கள் நிற்க வேண்டும் - சுபாஷிணிக்கு கௌசல்யா கோரிக்கை
- நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன்.
- எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நீதியின் பக்கம் என் காதலின் பக்கம் என்னால் உறுதி குலையாது வாழ முடிகிறது !
பாளையங்கோட்டையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவ கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கவினின் காதலியின் சகோதரனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கைதான சுர்ஜித்தின் பெற்றோரும், சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி கவினின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கவினும், அந்த பெண்ணும் இருக்கும் புகைப்படத்தை அவரது உறவினர்கள் வெளியிட்டு, இதை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கௌசல்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவினின் காதலிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தோழி சுபாஷிணிக்கு,
வணக்கம். நான் கெளசல்யா எழுதுகிறேன். முதலில் எனது வேண்டுகோள்: என்ன ஆனாலும் நீங்கள் கவின் பக்கம்தான் நிற்க வேண்டும்!
இங்கு கொலையுண்டு கிடப்பது நீங்கள் நேசித்த, கரம் பிடித்த, கை கோர்த்து நடந்த காதலன்! நீங்கள் அழைத்ததற்காகத்தான் கவின் உங்கள் தம்பியிடம் பேச சென்றிருப்பான்! கவினுக்கான நீதியின் பக்கம் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும்! அப்படிச் செய்தால் என் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதை என்னால் புரிந்து கொள்ள இயலும்.
நான் என் சங்கரை இழந்த பின்பு யாரும் இல்லாத அனாதை போலவே நின்றேன். ஒவ்வொரு பெரியாரிய அம்பேத்கரியத், மார்க்சிய தோழர்களும் அவர்களின் பிள்ளையைப் போல் என்னை அரவணைத்துக் கொண்டனர். இன்று வரை (10ஆண்டு ஆகப் போகிறது) சாதியைத் தூக்கிப் பிடித்த குடும்பத்துடன் எந்த உறவும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறது. அதற்குத் தோழர்கள் என்னை தங்கள் மகளாக பார்த்து கொண்டு என் சுயமரியாதையுடன் சொந்த காலில் நிற்க இன்று வரை உடன் இருக்கின்றனர்!
எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் நீதியின் பக்கம் என் காதலின் பக்கம் என்னால் உறுதி குலையாது வாழ முடிகிறது ! காரணம் சங்கரின் வழக்கில் எந்த இடத்திலும் நான் பொய் சொல்லவில்லை! சமரசம் இப்போது வரை செய்து கொள்ளவில்லை ! இனியும் செய்து கொள்ள மாட்டேன். நான் தொடக்கத்தில் சந்தித்த நெருக்கடிகள் பெரிது. என்னைப் போல் உன்னையும் சாதி வெறியர்கள் பற்றிக் கொள்வார்கள்! எவராக இருந்தாலும் என்ன அழுத்தம் தரப்பட்டாலும் உன் கவினுக்காகத் துணிவோடு நில்! உன் பக்கம் நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்! நடந்ததை அப்படியே சட்டத்தின் முன் சொல்ல வேண்டும்! நீ கவினின் காதலுக்கு நேர்மையாக இருப்பாய் என்பதை உணர்வேன். கவினின் உயிருக்கு விடை எடுத்தாக வேண்டும். கவினுக்காக மட்டுமல்ல கவின்களுக்காகவும் உன்னிடம் இறைஞ்சுகிறேன். தோழி! எல்லாவற்றையும் தாண்டி நான் இருக்கிறேன். கவினின் நீதிக்கு நானும் உன்னோடு இணைந்து கொள்கிறேன். வா ! எதற்கும் அஞ்சாதே! உன்னைத் தாங்கிக் கொள்ள நான் இருக்கிறேன்; நாங்கள் இருக்கிறோம்!
அன்புடன்,
கெளசல்யா
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.