தமிழ்நாடு செய்திகள்

ஜூன் மாதத்திற்குள் அடுத்த 4 மண்டல மாநாடுகளையும் நடத்த விஜய் திட்டம்
- கோவை மாநாடு விஜய்க்கு மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியிலும் புது உற்சாகத்தை கொடுத்து உள்ளது.
- மாநாடு முடிவடைந்ததும் த.வெ.க. தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு த.வெ.க. தலைவர் விஜய் கட்சியில் அடுத்தடுத்து அதிரடி அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இதுவரை கட்சி ரீதியாக 114 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 6 மாவட்ட செயலாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.
அடுத்த கட்டமாக 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி தேர்வு பணி முடிவடைந்து இதுவரை 69 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி 5 மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டமாக பல்வேறு இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. முதற்கட்டமாக கொங்கு மண்டலத்துக்குட்பட்ட 13 மாவட்டங்களுக்கான மாநாடு கடந்த 26, 27-ந்தேதிகளில் கோயம்புத்தூரில் நடந்தது.
மாநாட்டுக்காக கோவை வந்த விஜய்க்கு வழி நெடுகிலும் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.
வரலாறு காணாத கூட்டத்தால் கோவை மாநகரமே குலுங்கும் அளவிற்கு விஜய் வருகை பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
கோவை மாநாடு விஜய்க்கு மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியிலும் புது உற்சாகத்தை கொடுத்து உள்ளது.
இதை அடுத்து அடுத்த கட்டமாக மீதி உள்ள மண்டலங்களில் விரைவில் மாநாடு நடத்துவதற்கு விஜய் திட்டமிட்டு வருகிறார். இது பற்றி கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்துடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. வரும் ஜூன் மாதத்துக்குள் மீதி உள்ள 4 மண்டல பூத் கமிட்டி மாநாட்டையும் நடத்தி முடிக்க விஜய் திட்டமிட்டு உள்ளார்.
மாநாடு முடிவடைந்ததும் த.வெ.க. தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க த.வெ.க. மகளிரணியினர் தமிழகம் முழுவதும் காலையிலும் மாலையிலும் வீடு வீடாக சென்று த.வெ.க. கொள்கைகளையும், மக்கள் பணிகளையும் மக்களிடையே கொண்டு சேர்த்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி திராவிட கட்சிகள் மீது மக்களிடையே இருக்கும் எதிர்ப்புகளை த.வெ.க.வுக்கு சாதகமாக்கி கொள்ளும் நடவடிக்கைகளிலும் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.