தமிழ்நாடு செய்திகள்

கடலூர் மஞ்சக்குப்பத்தில் குப்பை வாகனத்தில் கட்டுக்கட்டாக கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகள்
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கடலூர் புதுநகர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பில்லுக்கடை சந்து தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை குப்பை வாகனத்தை தூய்மை பணியாளர்கள் எடுத்துச்செல்ல முயன்றனர்.
அப்போது குப்பை எடுக்கும் வாகனத்தில் கட்டு கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் அதிக அளவில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தேர்தல் வாக்கு பதிவின் போது வைக்கப்படும் மை, சீல் ஆகியவையும் கிடந்தது.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் தாசில்தார் மகேஷ் குப்பை அள்ளும் வாகனத்தில் இருந்த வாக்காளர் அடையாள அட்டைகளை சோதனை செய்த போது அனைத்து வாக்காளர் அடையாள அட்டைகளும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் தாசில்தார் இதனை கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் குப்பை வாகனத்தில் இருந்த வயர்களும் அறுக்கப்பட்டு இருந்தன. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.