தமிழ்நாடு செய்திகள்

புதுச்சேரியில் பா.ஜ.க. மாநில தலைவராக வி.பி.ராமலிங்கம் நாளை பதவி ஏற்பு
- புதிய அமைச்சர், புதிய நியமன எம்.எல்.ஏ.க்க ளுக்கு வாழ்த்துரை வழங்கும் விழா நடக்கிறது.
- கவர்னர் கைலாஷ்நாதன் ஜான்குமாருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
கூட்டணி அமைச்சரவையில் பா.ஜனதா சார்பில் அங்கம் வகித்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக ஜான் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு பதிலாக செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், காரைக்கால் ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கான பரிந்துரை கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று மாலை கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து அளித்தார். இதனை கவர்னர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். இதற்கு மத்திய உள்துறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பா ஜனதா மாநில தலைவர் பதவிக்கு வி.பி.ராமலிங்கம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் வி.பி. ராமலிங்கம் பா.ஜனதா மாநில தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பு நாளை முறையாக அறிவிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவரும் நாளை (திங்கட்கிழமை) மாலை பதவி ஏற்க உள்ளனர். மாலை 4 மணிக்கு ஜான்குமார் அமைச்சராக பதவி ஏற்கும் விழா கவர்னர் மாளிகையில் நடக்கிறது. அங்கு கவர்னர் கைலாஷ்நாதன் ஜான்குமாருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
தொடர்ந்து சட்டசபையில் சபாநாயகர் அறையில் 3 புதிய நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
தொடர்ந்து, முதலியார் பேட்டை சுகன்யா கன்வென்சன் சென்டரில் பா.ஜனதா புதிய மாநில தலைவர் பதவி ஏற்பு மற்றும் புதிய அமைச்சர், புதிய நியமன எம்.எல்.ஏ.க்க ளுக்கு வாழ்த்துரை வழங்கும் விழா நடக்கிறது.
விழாவில் பா.ஜனதா அகில இந்திய பொது செயலாளர் தருண் சுக், மேலிட பொருப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.