தமிழ்நாடு செய்திகள்

வரும் தேர்தலில் விஜய்யை முதல்வராக அமர வைப்போம்- புஸ்ஸி ஆனந்த் உறுதி
- எப்போது பேச வேண்டும், எப்போது மக்களைச் சந்திக்க வேண்டும்.
- மக்களோடு மக்களாக இருந்து பணிகளை செய்ய வேண்டும்.
கோவை மண்டல அளவிலான வாக்கு ச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் மாநாடு கோவை சரவணம்பட்டி அருகே குரும்ப பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரியில் நேற்று தொடங்கியது.
முதல் நாள் மாநாட்டில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்தியம், சேலம் வடமேற்கு, சேலம் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு உள்ளிட்ட 10 மாவட்டத்தை சேர்ந்த 7,500 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று, வாக்கு சாவடி முகவர்களுக்கு பல்வேறு தகவல்கள் அடங்கிய பூத் கமிட்டி புத்தகம், எலக்ட்ரானிக் டேட்டா கொண்ட பென் டிரைவ்களை வழங்கி பேசினார். மேலும் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
முதல் நாள் நிகழ்ச்சி முடிந்ததும் விஜய், அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார். நேற்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.
இன்று 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாடு இன்று மாலை தொடங்கிய நிலையில், விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார்.
முன்னதாக, பூத் கமிட்டி கருத்தரங்கில் பேசிய தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்," 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் நம் இலக்கு என்றும் விஜய்யை முதல்வராக அமர வைப்போம் என உறுதியேற்போம்" என்றார்.
மேலும் அவர்," எப்போது பேச வேண்டும், எப்போது மக்களைச் சந்திக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு தெரியும்.
ஒவ்வொரு வீட்டிலும் தவெக தலைவர் விஜய்க்கு ஓட்டு உள்ளது. அதை மறுக்க முடியாது. யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம். நம்முடைய உயிர், மூச்சு எல்லாம் விஜய்க்குதான்.
மக்களோடு மக்களாக இருந்து பணிகளை செய்ய வேண்டும்" என்றார்.