தமிழ்நாடு செய்திகள்

உதவி கலெக்டர் என ஏமாற்றி வங்கி அதிகாரியை திருமணம் செய்த இளம்பெண் கைது
- டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை தன்வர்த்தினி எழுதி உள்ளார்.
- அரசு வேலை வாங்கி தருவதாக தன்வர்த்தினி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் உள்பட சிலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பெரியமணலி குளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார்(29). இவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், நாமக்கல் அருகே வரகூராம்பட்டியில் உள்ள கனரா வங்கியில் அதிகாரியாக நான் பணியாற்றி வருகிறேன். நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள ஒரு திருமண தகவல் மையத்தின் மூலம் நாமக்கல் ராமாபுரம்புதூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரது மகள் தன்வர்த்தினி(29) என்பவருடன் அறிமுகமானது. அப்போது தன்வர்த்தினி பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் என அவரும், அவரது தந்தையும் எங்களிடம் கூறினர்.
தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி வையப்பமலை கொங்கு திருமண மண்டபத்தில் முறைப்படி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் விசாரித்த போது தன்வர்த்தினி பொள்ளாச்சி கோட்டாட்சியர் இல்லை என்பது எங்களுக்கு தெரிய வந்தது.
நாங்கள் தன்வர்த்தினியிடமும் அவரது பெற்றோரிடமும் விசாரித்தபோது, தன்வர்த்தினி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தேர்வாணைய செயலர் கையொப்பமிட்ட சான்றிதழையும் காண்பித்தனர். தன்வர்த்தினியின் பெயரில் தமிழக அரசின் தலைமை செயலாளர் கையொப்பமிட்ட ஒரு அடையாள அட்டையையும் என்னிடம் காண்பித்தனர்.
நாங்கள் தொடர்ந்து விசாரித்ததில் சான்றிதழ், அடையாள அட்டை, டி.என்.பி.எஸ்.சி. பட்டியல் அனைத்தும் போலியானது என தெரியவந்தது. ஏமாற்றும் நோக்கில் தமிழ்நாடு அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.
அரசு அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்தும், ஏமாற்றியும் என்னுடன் திருமணம் செய்து சட்டத்திற்கு புறம்பாக போலியான ஆவணங்களை தயாரித்த அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தார்.
அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சவீதா மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, தன்வர்த்தினியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு சேலம் பெண்கள் கிளைச் சிறையில் தன்வர்த்தினி அடைக்கப்பட்டார்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வை தன்வர்த்தினி எழுதி உள்ளார். நேர்முகத்தேர்வு வரை சென்றுள்ளார். 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். சென்னையில் சிவில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது நாங்கள் ஏமாந்து விட்டோம். ஒருவர் எங்களிடம் வந்து சான்றிதழ், அடையாள அட்டையை வழங்கி சென்றார் என தன்வர்த்தினி தெரிவித்தார்.
இதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. அவர் உண்மையை மறைக்கிறாரா என்று தெரியவில்லை. மேலும் சென்னையில் அடையாள அட்டை, சான்றிதழ் கொடுத்த நபரிடம் விசாரிக்க வேண்டியது உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே தன்வர்த்தினிக்கு ஆதரவாக பேசி வந்த இதில் தொடர்புடைய அசோகன் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தன் வர்த்தினிக்கு சான்றிதழ் கொடுத்ததாக கூறப்படும் சென்னையை சேர்ந்த திருமுருகன் என்பவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். அவர் சிக்கினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே அரசு வேலை வாங்கி தருவதாக தன்வர்த்தினி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் உள்பட சிலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இந்த வழக்கில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.