உலகம்

ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
- கெமிக்கல் பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததே வெடி விபத்திற்கு காரணம்.
- வெடிவிபத்து குறித்து விரிவான விசாரணைக்கு ஈரான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்
ஈரானின் தெற்கு பிராந்தியமான பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ராஜேய் துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு கண்டெய்னர் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. பல அடி உயரத்துக்கு தீப்பிழம்பு எழும்பி யது.
மேலும் தீ மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டன.
இந்த வெடிவிபத்தில் 5 பேர் பலியானார்கள் என்றும் 700 பேர் காயம் அடைந்தனர் என்றும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. 750-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ஏவுகணைகளுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்களை சரிவர கையாளாததால் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
இந்த எரிபொருள் சீனாவிலிருந்து 2 கப்பல்கள் மூலம் ஈரானுக்கு அனுப்பப்பட்ட அம்மோனியம் பெர்க்ளோரேட்டின் ஒரு பகுதியாகும் என்று கூறப்படுகிறது.
ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தும் திட எரிபொருளை கொண்டு வந்த கப்பலை முறையற்ற முறையில் கையாண்டதன் விளைவாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தனியார் பாதுகாப்பு நிறு வனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.
இந்த வெடிவிபத்து சத்தம் சுமார் 50 கி.மீ தொலைவுக்கு கேட்டது. இதில் பல துறைமுக கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன.
இதற்கிடையே வெடி விபத்து காரணமாக அம்மோனியா, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற ரசாயனங்களால் காற்று மாசுபடுவது குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜேய் துறைமுகம், எண்ணை மற்றும் பெட்ரோ கெமிக்கல்களை கையாளும் வசதிகள் கொண்ட, மிகப் பெரிய கண்டெய்னர் போக்குவரத்துக்கான முக்கிய துறைமுகமாகும் என்பது கவனிக்கத்தக்கது.