உலகம்

ஈரான் துறைமுகத்தில் கன்டெய்னர் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு
- ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகம் பந்தர் அப்பாஸ்.
- பந்தர் அப்பாஸ் துறைமுகம் பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
டெஹ்ரான்:
ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும். எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.
இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நின்ற ஒரு கன்டெய்னர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுதும் போர்க்களம் போல காட்சி அளித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 400 பேர் வரை படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் மேலும் பலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ஏவுகணை உந்துசக்தியை உருவாக்கப் பயன்படுத்தும் ரசாயனம் வெடித்தது தெரிய வந்துள்ளது.