பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்தவர் நிகோலஸ் சர்கோசி. இவர் 2007 முதல் 2012 வரை பிரான்ஸ் அதிபராக பதவி வகித்தவர்.
லிபியாவின் முன்னாள் அதிபர் மம்மர் கடாபிக்கு ஆதரவாக பேச நிகோலஸ் சர்கோசி முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ஈடாக , சர்கோசியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு கடாபி நிதி உதவி செய்வதற்கான ஒப்பந்தம் இருதரப்புக்கு இடையே மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு பாரீஸ் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி சர்கோசிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து இன்று பாரீஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், ஒரு லட்சம் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து சர்கோசி மேல்முறையீடு செய்தாலும், அவர் சிறைக்குச் செல்வது உறுதி என கூறப்படுகிறது.
தன் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வரும் சர்கோசி, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சர்கோசி கூறுகையில், நான் சிறையில் தூங்க வேண்டும் என அவர்கள் விரும்பினால் சிறையில் தூங்குவேன். ஆனால், தலைகுனிய மாட்டேன். தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றார்.