நியூயார்க்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கிய பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான சபலென்கா (பெலாரஸ்) - அமெரிக்காவை சேர்ந்த 8-வது வரிசையில் உள்ள அமண்டா அனிஸ்மோவா மோதினார்கள்.
இதில் சபலென்கா 6-3, 7-6 ( 7-3) என்ற நேர் செட் கணக்கில் அனிஸ் மோவாவை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டார். அமெரிக்க ஓபன் கோப்பையை வெல்ல அவருக்கு 1 மணி 34 நிமிட நேரமே தேவைப்பட்டது.
சபலென்கா கடந்த ஆண்டு ஜெசிகா பெகுலாவை தோற்கடித்து அமெரிக்க ஓபன் கிராண்ட் சிலாமை கைப்பற்றினார். தற்போது தொடர்ச்சியாக 2-வது முறையாக பட்டம் பெற்றுள்ளார். இதன் மூலம் செரீனா வில்லியம்சுக்கு பிறகு அமெரிக்க ஓபன் பட்டதை தொடர்ச்சியாக வென்ற வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். செரீனா 2012 முதல் 2014 வரை அமெரிக்க ஓபன் கோப்பையை தொடர்ச்சியாக வென்று இருந்தார்.
சபலென்கா கடந்த ஜனவரி மாதம் மேடிசன் கெய்சிடம் (அமெரிக்கா) ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியிலும், ஜூன் மாதம் கோகோ கவூப்பிடம் (அமெரிக்கா) பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியிலும் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தார். இந்த ஆண்டில் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அமெரிக்க வீராங்கனையை பழி தீர்த்துக் கொண்டு பட்டத்தை வென்று சாதித்தார்.
27 வயதான சபலென்கா கைப்பற்றிய 4-வது கிராண்ட் சிலாம் இதுவாகும். அவர் அமெரிக்க ஓபன் பட்டதை 2 தடவையும் (2024, 2025 ), ஆஸ்திரேலிய ஓபன் பட்டதை 2 முறையும் ( 2023, 2024 ) வென்றுள்ளார்.
அமெரிக்க ஓபன் கோப்பையை வென்ற சபலென்காவுக்கு ரூ.44 கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த அனிஸ்மோவா ரூ. 22 கோடி பெற்றார். சபலென்கா தனது 100-வது கிராண்ட்சி லாம் வெற்றியை பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி) -இரண்டாம் வரிசையில் உள்ள அல்காரஸ் (ஸ்பெயின்) மோதுகிறார்கள்.
இந்த ஆண்டில் இருவரும் 3-வது முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். சின்னர்-அல்காரஸ் மோதும் இறுதி ஆட்டத்தை அமெரிக்கா அதிபர் டிரம்ப் நேரில் பார்க்கிறார்.