உலகம்

சிந்து நதிநீரை நிறுத்தினால் ரத்த ஆறு பாயும்- பிலாவல் பூட்டோ மிரட்டல்
- பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
- இந்தியா அதன் உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதன்படி பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது.
இந்நிலையில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை இந்தியா பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ கூறியதாவது:-
சிந்து நதி எங்களுடையது. அது எங்களுடையதாகவே இருக்கும் என்று நான் இந்தியாவிடம் சொல்ல விரும்புகிறேன். ஒன்று எங்கள் தண்ணீர் அதன் வழியாகப் பாயும், அல்லது அவர்களின்(இந்தியா) ரத்தம் ஓடும். பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தானை இந்தியா பலிகடா ஆக்குகிறது. இதன் மூலம் அதன் உள்நாட்டு பாதுகாப்பு குறைபாடுகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறது,
இவ்வாறு அவர் கூறினார்.