உலகம்

இந்தியாவிடம் இருந்து உடனடி தாக்குதல் இருக்கலாம்..! படைகளை பலப்படுத்தியுள்ளோம் என்கிறார் பாகிஸ்தான் அமைச்சர்
- பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தீவிர ஆலோசனை.
- இந்தியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் பாகிஸ்தான் எல்லையில் படைகளை உஷார் படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில இருப்பவர்களுக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத பதிலடி கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோடி பாதுகாப்புத்துறை, அமைச்சர்கள் உள்ளிட்டவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் விரைவில் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது. இதனால் பாகிஸ்தான் தன்னை உஷார் படுத்தி வருகிறது. எல்லைகளில் படைகளை குவித்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப், இந்தியா விரைவில் தாக்குதல் நடத்தக்கூடும். இதனால் படைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் கூறுகையில் "நாங்கள் எங்கள் படையை வலுப்படுத்தியுள்ளோம். ஏனென்றால் இப்போது உடனடி தாக்குதல் ஒன்று இருக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த சூழ்நிலையில், சில மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். எனவே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ராணுவம் அரசுடன் இந்தியா தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது எனத் தெரிவித்ததுடன், இந்தியாவின் தாக்குதால் உடனடியாக இருக்கும் என்று அவர் நினைப்பதற்கான காரணங்கள் குறித்து தெரிவிக்கவில்லை.
எங்களுடைய இருப்புகளுக்கு நேரடி மிரட்டல் இருந்தால் மட்டும் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படும் மேலும் என்றார்.