உலகம்

தங்கத்தை விற்று உடனே பணம் பெற ஏடிஎம் சேவை - சீனாவில் அறிமுகம்
- தங்கம் விற்க கொண்டு சென்றால் பல மணிநேரம் காத்திருந்து பணத்தை பெற வேண்டி உள்ளது.
- விண்ணப்பம், கையொப்பம் என்று தேவையும் இல்லை.
தங்கம் விலை தற்போது வரலாறு காணாத வகையில் உயர்ந்தாலும் அதனை வாங்கும் ஆர்வம் மக்களிடையே நிலவுகிறது. ஏன் என்றால் அவசர தேவைக்கு தங்கத்தை வைத்தோ, விற்றோ பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது நடுத்தர மக்களின் எண்ணம். சரி, தங்கம் விற்க கொண்டு சென்றால் பல மணிநேரம் காத்திருந்து பணத்தை பெற வேண்டி உள்ளது. இதனால் சில நேரங்களில் மக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரும். இதனை சரி செய்யும் வகையில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம்.
ஆம், தங்க வர்த்தகத்தில் உயர் தொழில்நுட்ப திருப்பமாக, ஷாங்காயில் உள்ள ஒரு மால் பயனர்கள் தங்கள் தங்க நகைகளை விற்று 30 நிமிடங்களுக்குள் பணம் பெற அனுமதிக்கும் ஒரு ATM-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு விண்ணப்பம், கையொப்பம் என்று தேவையும் இல்லை.
சீனாவின் கிங்ஹுட் குழுமத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் கோல்ட் ஏடிஎம் தங்கப் பொருட்களை பகுப்பாய்வு செய்து, உருக்கி, எடைபோட்டு, அவற்றின் தூய்மையை தீர்மானித்து, அதற்குச் சமமான தொகையை நேரடியாக விற்பனையாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூன்று கிராமுக்கு மேல் எடையுள்ள தங்கப் பொருட்களை குறைந்தபட்சம் 50 சதவீத தூய்மை நிலையுடன் ஏற்றுக்கொள்கிறது.
40 கிராம் தங்க நெக்லஸ் ஒரு கிராமுக்கு 785 யுவான் (தோராயமாக ரூ. 9,200) விலை போனது. இதனால் அரை மணி நேரத்தில் 36,000 யுவான்களுக்கு மேல் (சுமார் ரூ. 4.2 லட்சம்) பணம் ஒருவருக்கு கிடைத்தது.