உலகம்

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன - பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு
- நம்மிடம் உள்ள ஏவுகணைகள், காட்சிக்காக அல்ல.
- இன்னும் 10 நாட்களுக்கு தொடர்ந்தால், இந்திய விமான நிறுவனங்கள் திவாலாகிவிடும்
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகியுள்ளது.
மேலும், பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதியை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை போருக்கான அறிவிப்பு என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவை தாக்க அணு ஆயுதங்கள் தயாரக இருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாசி மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால் அந்நாடு போருக்கு தயாராக வேண்டும். நம்மிடம் உள்ள இராணுவ உபகரணங்கள், நம்மிடம் உள்ள ஏவுகணைகள், காட்சிக்காக அல்ல.
நாடு முழுவதும் நமது அணு ஆயுதங்களை எங்கு வைத்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. நான் மீண்டும் சொல்கிறேன். இந்த அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகள் அனைத்தும் உங்களை (இந்தியாவை) குறிவைக்கின்றன" என்று தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தான் தனது வான்வெளிக்குள் இந்திய விமானங்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவு இந்தியாவில் விமானப் போக்குவரத்து அமைப்பை சீர்குலைத்துள்ளதாகவும், இந்த தடை இன்னும் 10 நாட்களுக்கு தொடர்ந்தால், இந்திய விமான நிறுவனங்கள் திவாலாகிவிடும் என்றும் அப்பாசி கூறினார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா தனது பாதுகாப்புத் தோல்விகளை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக பாகிஸ்தானைக் குறை கூறுவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.