உலகம்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயார் - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு
- இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், இந்தியா காண்பிக்கட்டும்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடந்த விழாவில் பேசிய ஷெபாஸ் ஷெரீப், "ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எந்தவொரு நடுநிலை, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. அதேவேளையில் நாட்டின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க பாகிஸ்தான் படைகள் முழு திறனுடனும் தயாராகவும் உள்ளன.
பஹல்காமில் சமீபத்தில் நடந்த சோகம் இந்த நிரந்தர பழி சுமத்தும் விளையாட்டின் மற்றொரு எடுத்துக்காட்டு. இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பாகிஸ்தான் எப்போதும் கண்டித்து வருகிறது" என்று தெரிவித்தார் .
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர், "இந்தியா பழி போடுகிறது... ஆதாரமிருந்தால் காண்பிக்கட்டும். நாங்கள் தற்காப்புக்காகவே தயார் நிலையில் இருக்கிறோம். இந்தியா மீண்டுமொருமுறை எங்கள் மீது பழிபோட்டு விளையாடுகிறது. பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்கு ஆதாரமிருந்தால், அதை இந்த உலகத்திற்கு இந்தியா காண்பிக்கட்டும்" என்று தெரிவித்திருந்தார்.