உலகம்

உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..!
- 3 வருடத்திற்கு மேலாக உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நடைபெற்று வருகிறது.
- ஏற்கனவே 7 பிராந்தியங்களில் ரஷியப் படைகள் ஊடுருவியிருந்தன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் புதின் சந்தித்த நிலையில், உக்ரைன்- ரஷியா இடையிலான போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை முயற்சி மேற்கொண்டு முன்னேறிச் செல்லாமல் தடைபட்ட நிலையில், உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தில் உள்ள கிராமங்களில் ரஷியப் படைகள் நுழைந்துள்ளன. இதனோடு 8ஆவது பிராந்தியத்தில் ரஷிய துருப்புகள் காலடி எடுத்து வைத்துள்ளது.
டொனெட்ஸ்க் பிராந்தியதில் கடுமையான சண்டை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் தொழில்துறை மையமாக விளங்கும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நோவோஹெயோர்ஹிவ்கா மற்றும் சபோரிஸ்கே ஆகிய கிராமங்களில் ரஷியப் படைகள் ஊடுருவியுள்ளன. இந்த மாத தொடக்கத்தில் ரஷியா, இரண்டு கிராமங்களை பிடித்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தது.
ஆனால், அந்த கிராமத்தில் ரஷியப் படைகள் வேரூன்றவில்லை அல்லது கோட்டை கட்டவில்லை. சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என உள்ளூர் தரைப்படைகளின் செய்தி தொடர்பாளர் விக்டர் ட்ரேஹுபோவ் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய ராணுவப் பலம் கொண்ட ரஷியாவை, மீண்டும் பின்னுக்குத் தள்ளும் அழுத்தத்திற்கு உக்ரைன் துருப்புகள் உள்ளாகியுள்ளன. சுமார் 1000 கி.மீ. எல்லையில் இருதரப்பிலும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்கள ராணுவ வீரர்கள் 3 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் சண்டையில் உயிரிழந்துள்ளனர்.
ரஷியப் படைகள் ஏற்கனவே சுமி, கார்கிவ், லுகான்ஸ்க், டொனெட்ஸ்க், சபோரிஸ்சியா, கெர்சன், மைகோலைவ் பிராந்தியங்களில் ஊடுருவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014 மார்ச் மாதம் உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா சட்டவிரோதமாக கைப்பற்றியது, தற்போதைய சண்டையில் உக்ரைனின் ஐந்தில் ஒரு புகுதியை ஆக்கிரமித்து்ளளது.
ரஷிய துருப்புக்கள் உக்ரைனுக்குள் தீவிரமாக ஊடுருவி கொண்டிருக்கும் வேளையில், ரஷிய அதிபர் புதின் அமைதி முயற்சிகளில் தாமதம் செய்து, தீவிர பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பதாக மேற்கத்திய நாட்டுத் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், புதின்- ஜெலன்ஸ்கி இடையே நேரடி பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார். பேச்சுவார்த்தை ஒப்பந்தம் ஏற்படுவதற்குள் முடிந்த அளவிற்கு உக்ரைன் நிலங்களை ஆக்கிரமிக்க புதின் திட்டமிடுள்ளார்.