உலகம்

போப் ஆண்டவர் இறுதிச் சடங்கில் டிரம்ப் பங்கேற்கிறார்
- உடல் நாளை காலை வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் ஆலயத்துக்கு எடுத்து செல்லப்படும்.
- 75-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் நல்லடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
வாடிகன்சிட்டி:
உலகம் முழுக்க சுமார் 250 கோடி கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் சுமார் 140 கோடி கிறிஸ்தவர்கள் கத்தோ லிக்க திருச்சபையை பின்பற்றுபவர்கள்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் ஆண்டவர் இருந்து வருகிறார். 266-வது போப் ஆண்டவராக அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த போப் பிரான்சிஸ் இருந்து வந்தார்.
88 வயதான போப் பிரான்சிஸ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். சிறு வயதிலேயே அவருக்கு நிமோனியா தாக்குதல் ஏற்பட்டு கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சிறு வயதில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது.
போப் ஆண்டவராக பதவி ஏற்ற பிறகு அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அவரது மூச்சு குழாயில் அலர்ஜி உருவானது. இதையடுத்து அவர் ரோம் நகரில் ஜெமிலி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு பிறகு அவர் உடல்நிலை சற்று தேறியதால் வீடு திரும்பி இருந்தார். நேற்று முன்தினம் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வாடிகன் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் தோன்றி சுமார் 40 ஆயிரம் பேருக்கு ஆசியும், வாழ்த்தும் தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அவரது உடல்நிலை மோசமானது. காலை 7.35 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது.
போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு நேற்று அதிகாலை திடீர் பக்கவாதம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரது இதயம் செயலிழந்தது. அந்த செயலிழப்பு மீட்கப்பட முடி யாத அளவுக்கு இருந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவ ருக்கு கோமா ஏற்பட்டது. கோமாவில் இருந்தபடியே அவர் உயிர் பிரிந்ததாக கத்தோலிக்க மத குருக்கள் தெரிவித்து உள்ளனர்.
போப் ஆண்டவர் மரணம் குறித்து தகவல் அறிந்ததும் உலகம் முழுக்க வாழும் தலைவர்கள், மத தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இரங்கல் செய்தி வெளியிட்டன. கத்தோலிக்க திருச்சபை அமைப்பில் 252 கார்டி னல்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வாடிகன் நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள்.
அதுபோல கத்தோலிக்க மதத்தின் மூத்த நிர்வாகிகள் உலகம் முழுவதும் இருந்து ரோமுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் ரோம் நகரில் கட்டுக் கடங்காத கூட்டம் ஏற்பட்டு உள்ளது. வாடிகனில் திரண்டு உள்ள மத குருக்கள், பொதுமக்கள் போப் ஆண்டவருக்கு இறுதி விடை கொடுக்கத் தயாராகி வருகிறார்கள்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல் நேற்று பதப்படுத்தப்பட்டது. நேற்று இரவு அவரது உடல் காசா சந்தாமர்தா ஆலயத்தில் பெட்டிக்குள் வைக்கப்பட்டது. அப்போது சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. பெண் கத்தோலிக்க மத குரு இந்த ஆராதனையை தலைமையேற்று நடத்தினார்.
போப் ஆண்டவரின் உடல் நாளை (புதன்கிழமை) காலை வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் ஆலயத்துக்கு எடுத்து செல்லப்படும். அங்கு போப் ஆண்டவருக்கு பொதுமக்கள் மற்றும் கத்தோலிக்க மத குருக்கள் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
அதன் பிறகு போப் ஆண்டவர் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடலை அவரது விருப்பப்படி மிக மிக எளிய முறையில் வாடிகன் நகருக்கு வெளியே நல்லடக்கம் செய்ய கத்தோலிக்க மூத்த மத குருக்கள் முடிவு செய்து உள்ளனர். இந்த நல்லடக்கத்தை எப்போது எப்படி, எந்த நேரத்தில் நடத்துவது என்று முடிவு செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கூடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் போப் ஆண்டவர் இறுதி ஊர்வலம் தேதி முடிவு செய்து அறிவிக்கப்படும். அதன் பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி சடங்கு ஏற்பாடுகள் தொடங்கும்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் இறுதி ஊர்வலத்தில் உலகத் தலைவர்கள் பெரும்பாலானவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவியுடன் ரோம் நகருக்கு சென்று போப் ஆண்டவர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
75-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் போப் ஆண்டவர் இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர். இதை கருத்தில் கொண்டு ரோம் நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பொதுவாக போப் ஆண்டவர் மரணம் அடைந்து விட்டால் 4 முதல் 6 நாட்களுக்குள் நல்லடக்கம் செய்வது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதன்படி போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடலும் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அடக்கம் முடிந்த பிறகு 9 நாட்கள் அரசு துக்கம் கடைபிடிக்கப்படும். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கும்.
15 முதல் 20 நாட்கள் கழித்து புதிய போப் ஆண்ட வரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.