நவராத்திரி ஸ்பெஷல்

Navratri Special: நவராத்திரி 6-ம் நாள்... இமயம் போல் உயர்வளிக்கும் இந்திராணி
- வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யானையில் வீற்றிருப்பவள் இந்திராணி.
- இந்திராணியை வழிபடுவதன் மூலம் குரு தோஷம் நிவர்த்தியாகும்.
நவராத்திரியின் ஆறாம் நாளன்று அன்னை பராசக்தி, இந்திராணியாக வழிபாடு செய்யப்படுகிறாள். இந்திரனின் சக்தி வடிவமாக திகழக்கூடியவள். மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள். வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யானையில் வீற்றிருப்பவள். சத்ரு பயம் மற்றும் மரண பயத்தை அழிக்கக்கூடியவள். உயர் பதவிகளில் உள்ள இடையூறுகளை தகர்க்கக்கூடியவள்.
இந்திராணியை வழிபட பருப்பு மாவால் தேவி நாமத்தை கோலம் போட வேண்டும். 16 அகல் தீபங்கள் ஏற்ற வேண்டும். வாழை நார் திரி போட்டு கிராம்பு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தீபங்கள் ஏற்றலாம். தேங்காய் சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். செம்பருத்தி மற்றும் சிவப்பு நிற பூக்கள் மற்றும் சந்தன இலை கொண்டு பூஜிக்க வேண்டும்.
"பொன்னான அன்னை இந்திராணியே புகழ்பாடி வந்தேன் இந்திராணியே கல்லார்கள் என்ன கற்றோர் என்ன நல்லோர்கள் என்ன தீயோர் என்ன உள்ளாரைக் மேன்மையெல்லாம் உண்டாகுமே"
என பாடி துதித்தால் வேண்டும் வரம் தருவாள்.
இந்திராணி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் குரு. எனவே இந்திராணியை வழிபடுவதன் மூலம் குரு தோஷம் நிவர்த்தியாகும். கட்டுமஸ்தான உடல்வாகு, நிரந்தரமான வெற்றி, மற்றும் மரியாதை பெறும் நிலையை அருள்வாள். நல்ல உறவுகள் விசுவாசமான மனைவியையும் குழந்தைகளையும், உயிருக்கும் மேலான நண்பர்களையும் பெற்று வாழலாம். ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு மேன்மையைத் தருவாள்.