வழிபாடு

ஆடிப்பெருக்கு : வீட்டில் வழிபாடு செய்யும் முறை
- பூஜை முடிந்தவுடன் புது கயிரை எடுத்து தங்கள் கணவரின் கைகளால் மாற்றிக்கொள்ள வேண்டும்.
- ஆடிப்பெருக்கன்று முடிந்தவர்கள் பத்திரப்பதிவு முதலான புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
ஆடிப்பெருக்கு அன்று அனைவரும் நீர் நிலைகளுக்கு சென்று விரதமிருந்து பூஜைகள் செய்வார்கள். அப்படி நீர் நிலைகளுக்கு சென்று பூஜை செய்ய முடியாதவர்கள் வீட்டிலிருந்தே விரதமிருந்து பூஜை செய்து கடவுளின் அருளைப் பெறலாம். தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஆடிப்பெருக்கு தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து வாசல் தெளித்து வீட்டைத் துடைத்து மாக்கோளமிட்டு, நீராட வேண்டும். பூஜையறையில் சாமி படங்களை பூக்களால் அலங்கரித்து புது மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், பழம், பத்தி, கற்பூரம், வெற்றிலை பாக்கு, தேங்காய் முதலான பூஜைக்குத் தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு நிறைகுடத்தில் இருந்து கலச சொம்பில் நீர் எடுத்து அரைத்து வைத்த மஞ்சளை சேர்க்க வேண்டும். அந்த கலச நீரை விளக்கேற்றி அதன் முன் வைத்து, தீபாராதனை செய்து, கங்கை, யமுனை, சரஸ்வதி, வைகை, காவிரி உள்ளிட்ட புனித நதிகளை மனதில் நினைத்து மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு முடிந்த பின்னர் அந்த தீர்த்தத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தலையில் தெளித்துக்கொண்டு, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். எஞ்சிய நீரை வீட்டிலுள்ள மரம், செடிகளுக்கு ஊற்றி விடலாம்.
பூஜை முடிந்தவுடன் புது கயிரை எடுத்து தங்கள் கணவரின் கைகளால் மாற்றிக்கொள்ள வேண்டும். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறை தாலியாக பாவித்து கட்டிக்கொள்ள அடுத்த ஆடிக்குள் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வசதி இருப்பின் அக்கம் பக்கத்து பெண்களை அழைத்து அவர்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், இரவிக்கைத் துண்டு, கொஞ்சம் இனிப்பு சேர்த்து கொடுக்கலாம். இந்த பூஜையின் போது நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம். நீர்நிலைகளுக்கு சென்று வழிபட முடியாதவர்கள், வீட்டிலிருந்த படியே கடவுளை வழிபட்டு அதன் பலன்களைப் பெறலாம்.
ஆடிப்பெருக்கன்று முடிந்தவர்கள் பத்திரப்பதிவு முதலான புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். முடியாதவர்கள் அரிசி, பருப்பு முதலான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆடிப் பெருக்கென்று புதிய தொடக்கம் வளர்ச்சியைத் தரும் என்பது நம்பிக்கை.