வழிபாடு

தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டில் ஒரே நாள் மட்டும் இரவு தரிசனம்
- வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி தந்தார், சிவபெருமான்.
- சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.
மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் மலையில் இருப்பதாலும், மலையை சுற்றி வனப்பகுதி என்பதாலும் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இதை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள்.
அதன்படி தினந்தோறும் மாலை 4 மணிக்கு மேல் சாமியை தரிசிக்க மலையேற அனுமதி இல்லை. மாலை 4.30 மணிக்கு நடை அடைக்கப்படும் வரை மட்டுமே பக்தர்கள் சிவனை தரிசனம் செய்ய முடியும். இரவு நேரங்களில் சுவாமியை தரிசிக்க முடியாது.
அதற்கு ஒரே ஒரு நாள் மட்டும் விலக்காக உள்ளது. அதுதான் மகா சிவராத்திரி அன்று மட்டும் விடிய, விடிய பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று இரவு விடிய, விடிய கோவிலில் பூஜைகள் நடக்கிறது. மொத்தம் 4 கால பூஜைகள் நடக்கின்றன. கடந்த மகாசிவராத்திரி அன்று 12 ஆயிரம் பக்தர்கள் இரவில் மலையேறி தர்மலிங்கேஸ்வரரை தரிசனம் செய்துள்ளனர்.
மகத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி நாளில் சிந்தையில் அமைதியுடன் ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.; ஒரு பிரளய காலத்தின்போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பரம்பொருளுக்குள் அடங்கின. இதையடுத்து அன்றைய இரவுப் பொழுதில் பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து பூஜை செய்தாள். அதோடு நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி அர்ச்சனையும் செய்தாள். சூரிய அஸ்தமன நேரம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை, பார்வதிதேவி பூஜை செய்த காலமே, 'மகா சிவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது.
வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி தந்தார், சிவபெருமான். அவரிடம் பார்வதிதேவி, "ஐயனே.. சிவராத்திரி தினத்தில் நான்கு ஜாமம் முழுவதும் தங்களை (சிவன்) நினைத்து வழிபடுபவர்களுக்கு, சகல சவுபாக்கியங்களும் தந்தருள வேண்டும். மேலும் அவர்களின் வாழ்நாள் இறுதியில் முக்தியையும் அளிக்க வேண்டும்" என்றாள். ஈசனும், அதன்படியே பார்வதிக்கு அருள் செய்தார்.
மாதம்தோறும் சிவராத்திரி தினம் வந்தாலும், அம்பிகையால் வழிபடப்பட்ட மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை 'மகா சிவராத்திரி' என்று கொண்டாடுகிறோம்.
ஒரு முறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் இடையே 'தங்களில் யார் பெரியவர்?' என்ற போட்டி உருவானது. அப்போது சிவபெருமான், அடிமுடி காண முடியாத ஜோதிப் பிளம்பாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். 'ஈசனின் முடியையோ, அடியையோ யார் முதலில் காண்கிறார்களோ, அவர்களே பெரியவர்' என்று சொல்லப்பட்டது.
இதையடுத்து அன்னப் பறவை உருவம் எடுத்த பிரம்மன், ஈசனின் முடியைத் தேடியும், வராக வடிவம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாளத்தைத் தோண்டியபடி ஈசனின் அடியைத் தேடியும் புறப்பட்டனர். இந்த கோலத்தையே, 'லிங்கோத்பவர் கோலம்' என்பார்கள். மகாசிவராத்திரி நாளில்தான், இந்த திருக்காட்சி காணக் கிடைத்தது என்கிறார்கள்.
சிவராத்திரி விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். வருடம் முழுவதும் விரதம் மேற்கொள்வது, நூறு அஸ்வமேத யாகம் செய்வது, பலமுறை கங்கையில் நீராடுவது ஆகியவை கூட, ஒரு மகா சிவராத்திரி விரதத்திற்கு ஈடாகாது. அந்த அளவுக்கு மகாசிவராத்திரி விரதம், மகத்துவம் வாய்ந்தது.
விரதம் இருப்பது எப்படி?
சிவராத்திரிக்கு முன்தினம் ஒரு வேளை மட்டுமே உணவருந்த வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது வீட்டில் பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று, மூலவர் சிவலிங்கத்தை வணங்கிவர வேண்டும். மாலையில் வீட்டில் பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து, சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்கான பொருட்களுடன் சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
அங்கு நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம், அலங்காரங்களை கண்டுகளிக்க வேண்டும். அப்போது இறைவனின் திருநாமத்தைத் தவிர வேறு எதையும் உச்சரிக்கக் கூடாது. இரவு முழுவதும் கண் விழித்து இருக்க வேண்டும். ஆலயத்திற்குச் சென்றுதான் கண்விழித்து இருக்க வேண்டும் என்று கிடையாது.
வீட்டிலும் கூட மகா சிவராத்திரி அன்று, நான்கு ஜாமங்களிலும் முறைப்படி பூஜை செய்து, ஈசனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது உரிய பலனைத் தரும். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சிந்தையில் அமைதியுடன், சிவபுராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும்.
பற்றற்று இருப்பதுடன், பேராசைகளைக் கைவிட்டு, பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோவில்களுக்கு வாங்கிக் கொடுப்பதும் நன்மையை அளிக்கும்.
வீட்டில் மகா சிவராத்திரி பூஜை செய்யும் போது, சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா, பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து, இறைவனை பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோவிலுக்குச் சென்று வழிபடுபவர்கள், ஆலயத்தை வலம் வந்து, சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
நான்கு ஜாம பூஜைகளும் முடிந்த பிறகு, மறுநாள் காலையில் நீராடி, காலையில் செய்யும் காரியங்களையும், உச்சிகாலத்தில் முடிக்க வேண்டிய காரியங்களையும் அப்போதே முடிக்க வேண்டும். பின்னர் இறைவனுக்கு படைத்த நைவேத்தியங்களை தானம் அளித்து, விரதம் இருப்பவர்களும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத் துதிகளைச் சொல்லியும், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டும், அந்த இரவை கழிக்கலாம். தொடர்ச்சியாக 24 வருடங்களுக்கு சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், சிவகதி அடைவார்கள் என்பது ஐதீகம். அத்துடன் அவர்களின் 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தி கிடைக்கப்பெறும் என்கிறார்கள்.
நான்கு கால பூஜைகள்
மகாசிவராத்திரி நாளில், இரவு முழுவதும் கண் விழித்து, நான்கு கால பூஜைகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கால பூஜையிலும், சிவபெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை, நெய்வேத்தியம் போன்றவை செய்யப்படும்.
முதல் காலம்:மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, இரண்டாம் காலம்:இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, மூன்றாம் காலம்:நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை, நான்காம் காலம்:அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை இந்த நான்கு கால பூஜைகளும் சிவபெருமானின் அருளைப் பெறவும், பாவங்கள் நீங்கவும், முக்தி அடையவும் செய்யப்படுகின்றன.