வழிபாடு

கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மனின் மகிமை
- வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இரவு அன்ன தானம் வழங்கப்படுகிறது.
- பெருமாள் கோவிலில் இருந்து பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சீர் கொண்டு வரப்படுவது சிறப்பு.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது போல் பெரிய மாரியம்மன் கோவிலுக்கும் பல சிறப்புகள் உள்ளன. இந்த கோவில் 300 வருடம் பழமையானது.
கோவிலின் மூலவராக பெரிய மாரியம்மன் உள்ளார். கோவிலில் அரசமர விநாயகர், முருகர், துர்க்கை அம்மன், நவக்கிரகம் போன்ற சாமி சிலைகள் உள்ளன. கோவிலில் பெரிய பாம்பு புற்று ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் ஆடி மாதம் முழுவதும் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று இரவு அன்ன தானம் வழங்கப்படுகிறது.
ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோவிலில் இருந்து பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சீர் கொண்டு வரப்படுவது சிறப்பு. ஆடி 18 அன்று கன்னிமாருக்கு காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோவிலின் முக்கிய வழிபாடாக புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியம் வேண்டி அம்மனுக்கு எண்ணை வைத்து வழிபட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பல வருடங்களாக இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் ஆடி மாதம் கோவிலில் பாம்பு புற்றில் நாக பஞ்சமி விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடி மாதம் முழுவதும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆடி மாதம் பெண்கள் அதிக அளவில் வந்து அம்மனை வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்ற பரிகாரங்கள் செய்வார்கள்.