வழிபாடு

இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்- பக்தர்கள் தரிசனம்
- கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி இஸ்கான் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு பால், நெய், தேன் மற்றும் பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.
திருவான்மியூர்:
கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள பல கோவில்களில் இன்று மாலை கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து இன்று காலையில் இருந்தே இஸ்கான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி இஸ்கான் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆன்மிகம், இசை மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் களை கட்டியது. முன்னதாக நேற்று மாலையில் சந்தியா ஆரத்தி நடந்தது. இரவு 10.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு பால், நெய், தேன் மற்றும் பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு, மகா ஆரத்தி நடந்தது.
பின்னர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாகவதம் வகுப்பு, குரு பூஜை மற்றும் அழகாக அலங்கரிக்கப்பட்ட தெய்வங்களின் தரிசனம் நடைபெற்றது. இன்று நாள் முழுவதும் கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கிருஷ்ணரின் அவதாரத்தைக் கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.