கனடாவில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:-
காஷ்மீரின் பகல்காம் மீதான பயங்கரவாத தாக்குதல் ஒவ்வொரு இந்தியரின் ஆன்மா, அடையாளம் மற்றும் கண்ணியத்தின் மீதான தாக்குதல் ஆகும். இது முழு மனிதகுலத்தின் மீதான தாக்குதல் ஆகும்.
பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைந்த உலகளாவிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையை ஊக்குவிக்க ஜி-7 தலைவர்களை வலியுறுத்துகிறேன். பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி. அதற்கு எதிராக ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தும் அனைத்து நாடுகளுக்கும் நிற்கிறது. உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்காக, உலகம் அதன் அணுகுமுறையில் தெளிவாக இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் எந்த நாடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். நமது சொந்த விருப் பங்களின் அடிப்படையில் அனைத்து வகையான தடைகளையும் விதிக்க முயன்றாலும் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கும் நாடுகளுக்கு வெகுமதி அளிக்கப்படுகிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கையாள்வதில் இரட்டை நிலைப்பாடுகளை பயன்படுத்த கூடாது.
உலகளாவிய தெற்கு நாடுகள் நிச்சயமற்ற தன்மை மற்றும் மோதல்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. உணவு, எரிபொருள், உரம் மற்றும் நிதி தொடர்பான நெருக்கடிகளால் முதலில் பாதிக்கப்படுவது அவர்கள்தான். தெற்கு நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகளை உலக அரங்கிற்கு கொண்டு வருவதை தனது பொறுப்பாக இந்தியா கருதுகிறது. இந்த பிரச்சினையை ஜி-7 நாடுகள் இன்னும் தீவிர மாகக் கையாள வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா-கனடா உறவு மிகவும் முக்கியமானது. பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் வெற்றி அளிக்கும் ஒத்துழைப்பை அடைய இருதரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என்று மோடி தெரிவித்தார்.
மேலும் இந்தியா-கனடா இடையே தூதரக உறவை பலப்படுத்த இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்தபோது இந்தியா-கனடா இடையே யான உறவில் விரிசல் ஏற்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.
கனடா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி குரோஷியாவுக்கு புறப்பட்டு சென்றார்.