வழிபாடு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்
- நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடு.
- 27-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 28-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 7ம் நாளான நேற்று மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன்பின் ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். திமஞ்சனம் கண்டருளி இன்று அதிகாலை 1மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
8ம் நாளான இன்று (25-ந் தேதி) காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்து சேர்ந்தார்.
பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளி இரவு 9 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நாளை (26-ந் தேதி) காலை நடைபெறுகிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தோளுக்கினியானில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைகிறார்.
பின்னர் அதிகாலை 5.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளுகிறார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 27-ந்தேதி சப்தா வரணம் நடைபெறுகிறது.
விழாவின் நிறைவு நாளான 28-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார், கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.