என் மலர்

    வழிபாடு

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார்கள்.
    • இந்திரவிமானத்தில் எழுந்தருளும் மீனாட்சி 4 மாசி வீதிகளில் எழுந்தருளி திக்கு விஜயம் செய்கிறார்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (29-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி சன்னதி முன்பாக உள்ள தங்ககொடி மரம் பல வண்ண மலர்கள், மக்காச்சோளம் உள்ளிட்ட நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    காலை 10 மணியளவில் பிரியாவிடையுடன் சுந்தரே சுவரரும், மீனாட்சி அம்மனும் கொடி மரம் முன்பு எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து 10.30 மணி முதல் 10.59 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி-அம்பாள் முன்னிலையில் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

    12 நாட்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார்கள்.

    விழாவின் முதல் நாளான இன்று இரவு கற்பக விருட்சம்-சிம்ம வாகனத்தில் சுவாமி-அம்பாள் 4 மாசி வீதிகளில் எழுந்தருளுகிறார்கள்.

    2-ம் நாளில் (30-ந்தேதி) காலையில் தங்கச்சப்பரத்திலும், இரவு பூதம்-அன்ன வாகனத்தில் வீதி உலா வருகிறார்கள். 1-ந்தேதி காலையில் தங்கச்சப்பரத்திலும், இரவு கைலாசபர்வதம்-காமதேனு வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.

    4-ம் நாளில் (2-ந்தேதி) காலை 9 மணிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து சின்னடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகபடியில் எழுந்தருளுகிறார்கள். மாலை 6 மணி அங்கு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் சுவாமி-அம்பாள், மாலை மீண்டும் கோவிலுக்கு சென்றடைகிறார்கள்.

    5-ம் நாள் (3-ந்தேதி) காலையில் தங்க சப்பரத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் மாசி வீதிகள் வழியாக வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயண சாவடியில் எழுந்தருளுகிறார்கள். இரவு தங்கக்குதிரை வாகனத்தில் வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்கு சென்றடைகிறார்கள்.

    6-ம் நாள் (4-ந்தேதி) காலை 7.30 மணிக்கு தங்க சப்பரத்தில் வீதி உலாவும், இரவு தங்க ரிஷபம், வெள்ளி ரிஷபத்தில் வீதி உலாவும் நடக்கிறது. 7-ம் நாள் (5-ந்தேதி) காலை கங்காளநாதர் மர சிம்மாசனத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாள் 4 மாசி வீதி வழியாக உலா வருகின்றனர். இரவு நந்திகேஸ்வரர், யாழி வாகனத்தில் வீதி உலா புறப்பாடு நடக்கிறது.

    8-ம் நாள் (6-ந்தேதி) காலை தங்க பல்லக்கில் சுவாமி-அம்பாள் அருள் பாலிக்கின்றனர். இரவு 7.35 மணிக்கு மேல் மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள ஆறுகால் பீடத்தில் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.

    அப்போது அம்மனுக்கு கிரீடம் சாற்றி செங்கோல் கொடுக்கும் வைபவம் நடக் கிறது. மறுநாள் (7-ந்தேதி) காலை மரவர்ண சப்பரத்தில் வீதி உலா நடக்கிறது. அன்று மாலை அஷ்டதிக்கு பாலகர்களை எதிர்த்து மீனாட்சி அம்மன் வெற்றி பெறும் திக்குவிஜயம் நடக்கிறது. இந்திரவிமானத்தில் எழுந்தருளும் மீனாட்சி 4 மாசி வீதிகளில் எழுந்தருளி திக்கு விஜயம் செய்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 8-ந்தேதி விமரிசையாக நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் உலா வருகிறார்கள். காலை 8.15 மணி முதல் 9.15 மணிக்குள் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மிதுன லக்னத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக்கோலத்தில் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார்கள்.

    மறுநாள் (9-ந்தேதி) அதிகாலை 5.05 மணி முதல் 5.28-க்குள் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங் குகிறது. பெரிய தேரில் சுந்தரேசுவரரும், சிறிய தேரில் மீனாட்சியும் எழுந்தருளுவார்கள். பக்தர்கள் வெள்ளத்தில் 4 மாசி வீதிகளில் தேர் ஆடி அசைந்து வரும் நிகழ்வு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று இரவு சப்தவர்ண சப்பரத்தில் வீதி உலா நடக்கிறது.

    12-ம் நாள் இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள். இத்துடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் மே12-ந்தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.

    Next Story
    ×