வழிபாடு

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்....விண்ணதிர முழங்கிய பக்தர்களின் அரோகரா கோஷம்
- சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
- தினமும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வந்தது.
தென்காசி:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவிலும் ஒன்றாகும். காசிக்கு நிகரானதாக கருதப்படும் இந்த கோவிலில் தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இக்கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் கும்பாபிஷேகம் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
எனவே மீண்டும் தென்காசி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையேற்று கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பழமை வாய்ந்த தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா விரைவில் நடத்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி 18 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேக விழா நடத்த தீர்மானிக்கப்பட்டு ஏப்ரல் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முடிக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்றது. அதன்படி கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ராஜ கோபுரத்திற்கு வர்ணம் தீட்டும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
மேலும் பல்வேறு சிறப்பு பூஜைகள், தினமும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வந்தது. நேற்று காலை முதல் இரவு வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 5 மணிக்கு விநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, திரவியாகுதி நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு காசி விசுவநாதசுவாமி ராஜ கோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர லோக சிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியார் நடத்தினார்.
பூஜைகளை காசி விசுவநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள் செய்தனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சென்னை, கன்னியாகுமரி, கோவை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் தென்காசியில் குவிந்தனர். இதனால் தென்காசி நகரமே விழாக்கோலம் பூண்டது.
கோவில் பகுதியில் எங்கு பார்த்தாலும் மனிதர்களாகவே காணப்பட்டனர். கும்பாபிஷேகம் நடைபெற்றபோது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவ.. சிவ.. அரோகரா.. என விண்ணதிர கோஷங்கள் எழுப்பினர்.
கும்பாபிஷேக விழாவயொட்டி இன்று தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
விழாவில் கலெக்டர் கமல் கிஷோர், ராணிஸ்ரீ குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி, தென்காசி நாடார் சங்க தலைவர் ஏ.கே.எஸ். ராஜசேகரன் நாடார், செயலாளர் ராஜகோபால் நாடார், பொருளாளர் எஸ். ராஜன் நாடார் மற்றும் தருமை ஆதீனம், சிவனடியார்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் கதிமணி, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் 4 கூடுதல் சூப்பிரண்டுகள், 13 டி.எஸ்.பி.க்கள் உள்பட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி தென்காசியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் 11 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.