வழிபாடு

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கல்யாண வைபவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
- மங்கள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.
- வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு மலர்மாலை அணிவித்து வழிபாடு.
தென்காசி:
தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான காசி விஸ்வநாதர் கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரம்மாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாலையில் சிறப்பு சொற்பொழிவுடன் காசி விஸ்வநாதர் உலகம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலின் உள்பகுதி பிரகாரத்தில் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட நந்தி வாகனத்தில் உலக அம்மன் மற்றும் காசி விஸ்வநாதர் எழுந்தருளி பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்ற போது கோவில் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதனைத் தொடர்ந்து உலகம்மன் காசி விஸ்வநாதர் சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து காட்சி அளித்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு மலர்மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.
முன்னதாக திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு கோபுர வாயிலின் முகப்பு பகுதியில் பிரம்மாண்ட அத்த பூக்கோலம் போடப் பட்டிருந்ததை பக்தர்கள் தங்களின் செல்போன்களில் படம் பிடித்து உற்சாக மடைந்தனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சி முடிந்த பின்பும் இன்று காலை வரையில் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு எவ்வித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் சிறப்பாக பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்த னர்.
அவர்களுக்கு கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் பக்தர்கள் பொதுமக்கள் சார்பில் தங்களின் நன்றியை தெரிவித்தனர்.