குழந்தைகள் சில சமயங்களில் பெற்றோரின் பேச்சை கேட்காமல் இருப்பதுண்டு. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி கொடுக்காதபோதோ, அவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்கும்போதோ கடும் கோபம் கொள்வார்கள். அந்த சமயத்தில் எந்த வேலை சொன்னாலும் செய்ய மாட்டார்கள். பெற்றோரின் பேச்சுக்கு செவிமடுக்காமல் எதிர்த்து பேசவும் செய்வார்கள். பிடிவாதமும் பிடிப்பார்கள். அவர்களை திட்டாமல் அன்பாக அரவணைக்க ஒருசில விஷயங்களை செய்தாலே போதுமானது. உங்கள் சொல் பேச்சை கேட்டு நடக்க தொடங்கிவிடுவார்கள். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்...
உணர்ச்சி ரீதியாக இணையுங்கள்
குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன்பு உணர்ச்சி ரீதியாக அவர்களுடன் இணையுங்கள். அவர்களின் தோளில் மென்மையாக தொடுவது, கன்னத்தை பிடித்து கிள்ளுவது, அவர்களின் பெயரை மெதுவாக உச்சரிப்பது, கட்டிப்பிடிப்பது என அன்பை பொழியுங்கள். அவை அவர்களின் உணர்வுகளை ஆசுவாசப்படுத்தும். கோபம், பிடிவாதத்தை தளர்த்தச் செய்யும்.
கண்கள் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்
குழந்தைகள் இறுக்கமான மன நிலையிலோ, கடும் அதிருப்தியுடனோ இருந்தால் அவர்களை உடனே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். அந்த சமயத்தில் அவர்களை உரத்த குரலில் அழைப்பது, ஏதேனும் வேலை செய்யுமாறு கட்டளையிடுவது போன்ற செயல்கள் அவர்களிடத்தில் எரிச்சலை அதிகப்படுத்தும்.
அதற்கு இடம் கொடுக்காமல் அவர்கள் இருக்கும் இடத்திற்கே நீங்கள் சென்று அவர்களின் மன நிலையை கவனியுங்கள். கண்கள் மூலம் நேருக்கு நேர் தொடர்பு கொள்ளுங்கள். அப்படி கண்களை பார்த்து பேசுவது அவர்களின் ஆக்ரோஷத்தை தணிக்கும். அதன் பிறகு அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட தொடங்கும்.
கட்டளை இடாதீர்கள்
குழந்தைகள் கடுமையான கட்டளைக்கு எளிதில் இணங்கமாட்டார்கள். ஆனால் அன்புக்கு கட்டுப்படுவார்கள். அதிகார தொனியிலோ, உரத்த குரலிலோ பேசுவதற்கு பதிலாக அன்பாக பேசி அவர்களின் விருப்பம் என்ன என்பதை முதலில் ஆராயுங்கள். முதலில் அவர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு அதன் பிறகு உங்கள் விருப்பப்படி செயல்பட முயற்சியுங்கள்.
அமைதியான குரலில் பேசுங்கள்
குழந்தைகள் விஷயத்தில் எப்போதும் மென்மையான அணுகுமுறையையே கையாள வேண்டும். கட்டளையிடுவது, சத்தமாக பேசுவது என குரல் தொனியில் ஆக்ரோஷம் வெளிப்படக்கூடாது. மெதுவாக, தெளிவாக, அன்பாக பேசுங்கள். அதிக சத்தத்தை விட அமைதியான குரல் எளிதில் அவர்களை உங்கள் வசப்படுத்திவிடும். நீங்கள் சொல்வதற்கு செவி சாய்க்க தொடங்கிவிடுவார்கள்.

குழந்தைகளின் செயல்பாடுகளை பாராட்டுங்கள்
குழந்தைகளின் சிறிய முயற்சிகளை கூட பாராட்டுங்கள். சின்ன சின்ன விஷயங்களை ஊக்கப்படுத்துங்கள். அடுத்த முறை இன்னும் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டுவார்கள்.
மென்மையாக அணுகுங்கள்
குழந்தைகளின் செயல்பாடுகள் அவர்களின் வயதுக்கு தக்கபடியே அமையும். அவர்களிடம் நடத்தையில் குறைபாடுகள் இருக்கலாம். அதனை கண்டிப்புடன் சுட்டிக்காட்டுவதோ, கடுமையாக திட்டுவதோ கூடாது. அதனை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கி புரியவைக்க வேண்டும். மென்மையாக அணுகுவதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளை படிப்படியாக மாற்றிவிட முடியும்.
கால அவகாசம் கொடுங்கள்
குழந்தைகள் எதையும் உடனடியாக செய்யமாட்டார்கள். நீங்கள் சொன்னதை செயல்படுத்த அவர்களுக்கு கால அவகாசம் கொடுங்கள். அதனை சிறப்பாக செய்து முடிக்க ஆலோசனையும் வழங்குங்கள். அப்படி அறிவுறுத்தலை வழங்கிய பிறகு அமைதியாக இருங்கள்.
உங்களின் பொறுமை நிச்சயம் மாயாஜாலம் நிகழ்த்தும். அடிக்கடி தலையீடு செய்வதை தவிர்த்தால் போதும். நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவார்கள்.
பழக்கப்படுத்துங்கள்
குழந்தைகளை வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்காதீர்கள். அவர்களாகவே ஆர்வமாக வேலை செய்ய ஊக்குவியுங்கள். அவர்கள் பயன்படுத்தும் அறையை சுத்தம் செய்ய வைக்க வேண்டும் என்றால், கட்டளையிடாதீர்கள்.
'அறையை சுத்தம் செய்' என்று சொல்வதற்கு பதிலாக 'தரையில் கிடக்கும் பொம்மையை அலமாரியில் வை. புத்தகங்களை ஒழுங்குபடுத்து. அறையில் சிதறி கிடக்கும் பொருட்களை அந்தந்த இடத்தில் வை' என அன்பாக கூறுங்கள். அதைத்தொடர்ந்து 'நீங்கள் பயன்படுத்தும் அறையை நீங்களேதான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்' என்று கூறி அவர்களுடன் சேர்ந்து அறையை சுத்தப்படுத்துவதற்கு உதவுங்கள். நாளடைவில் அவர்களாகவே சுத்தம் செய்வதற்கு பழகிவிடுவார்கள்.