பொது மருத்துவம்

இதயம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
- ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதயம் சற்று வேகமாக துடிக்கும்.
- தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு முதலில் உருவாகும் உறுப்பு இதயம்தான்.
உடலில் எந்த உறுப்பு செயல் இழந்தாலும் மருத்துவ உதவியுடன் மனிதன் உயிர் வாழ வாய்ப்பு உண்டு. மூளை செயல் இழந்தால்கூட (மூளைச்சாவு அடைதல்) உயிர் வாழ முடியும். ஆனால் இதயம் இயங்குவது நின்றுபோனால் மரணம்தான். இதனால்தான் எந்த உறுப்புக்கும் இல்லாத முக்கியத்துவத்தை இதயம் பெறுகிறது.
• மார்பின் இடது பக்கத்தில் கையளவு அமைந்துள்ள இதயம், தசைகளான 4 அறைகளை கொண்டது. மூன்றடுக்கு தசைச் சுவர்களுடன்கூடிய இதயம் 'பெரிகார்டியம்' என்ற பையினுள் அமைந்துள்ளது. இதயத்தின் எடை ஆண்களுக்கு 300 முதல் 350 கிராம் வரையிலும், பெண்களுக்கு 250 முதல் 300 கிராம் வரையிலும் இருக்கும்.
• உடலின் பல்வேறு பாகங்களில் இருந்தும் இதயத்துக்கு வரும் ரத்தம் நுரையீரல் உதவியுடன் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் இதயத்துக்கு வந்து அங்கிருந்து உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
• இதயத்தில் உள்ள நான்கு அறைகளும் சுருங்கி விரிவதன் மூலம் உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கும் பணி இடைவிடாமல் நடைபெறுகிறது.
• அந்த வகையில் ஒரு நிமிடத்துக்கு 5 லிட்டர் ரத்தம் இதயத்தில் இருந்து உடல் முழுவதற்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ரத்த ஓட்டத்தின் மூலம் உடல் உறுப்புகளுக்கு தேவையான பிராணவாயு மற்றும் ஊட்டசத்துகள் கிடைக்கின்றன.
• இதயம் சுருங்கி விரியும்போது 'லப்-டப்' என்ற ஓசையுடன் எழும் சத்தம்தான் இதயத்துடிப்பு எனப்படுகிறது.
• ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம் 7,200 லிட்டர் அளவு ரத்தத்தை 'பம்ப்' செய்கிறது.
• 66 வயது வரை நிரம்பிய ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏறக்குறைய 250 கோடி தடவை இதயம் துடிக்கும்.
• ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதயம் சற்று வேகமாக துடிக்கும்.
• தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு முதலில் உருவாகும் உறுப்பு இதயம்தான். அப்போது துடிக்கத் தொடங்கும் இதயம், கடைசியில் மூச்சு நின்று உயிர் உடலை விட்டு பிரியும் வரை தொடர்ந்து துடித்துக் கொண்டே இருக்கிறது.
• அந்த வகையில் நம் உடலில் ஓய்வின்றி உழைக்கும் ஒரே உறுப்பு இதயம்தான். அது ஓய்வெடுக்கத் தொடங்கினால். வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்று அர்த்தம்.
• பிறவியிலேயே ஏற்படும் கோளாறுகள், இதய தசைகள் மற்றும் வால்வுகளின் ஏற்படும் நோய்கள், மேலும் இதயத்துடன் நேரடி இணைப்பை கொண்ட ரத்தக்குழாய்களில் உண்டாகும் நோய்கள் காரணமாக இதயநோய் ஏற்படுகிறது. ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக இதயத்துக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதைத்தான் மாரடைப்பு என்கிறோம். தக்க சமயத்தில் இதை கண்டறிந்து, அடைப்பை நீக்கி சரி செய்தால் பிழைத்துக் கொள்ளலாம்.
• ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்படுகிறது.