உள்ளூர் செய்திகள்

மங்களமேடு அருகே மணல் ஏற்றி சென்ற லாரி நடுரோட்டில் தீ பிடித்து எரிந்தது
- நடுரோட்டில் லாரி தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
குன்னம்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து வெள்ளை எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி ஒரு லாரி சென்றது. லாரியை கரூர் கிருஷ்ணராயபுரம் குப்பனம்பட்டியை சேர்ந்த கதிர்வேல் (வயது 23) என்பவர் ஓட்டினார்.
லாரி பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள அயன் பேரையூர் சமத்துவபுரம் அருகே சென்றபோது எதிர் பாராதவிதமாக லாரியின் டயர் வெடித்து தீப்பற்றியது. உடனே டிரைவர் கதிர்வேல் லாரியில் இருந்து கீழே இறங்கினார்.
சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.
பின்னர் இதுபற்றி பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதுமாக எரிந்து சேதமானது. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னர் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. நடுரோட்டில் லாரி தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.