உள்ளூர் செய்திகள்

பண்ணாரியம்மன் கோவில் அருகே உலா வரும் ஒற்றை யானை-பக்தர்கள் அச்சம்
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
- காலை, மாலை, இரவு நேரம் என பண்ணாரி அம்மன் கோவில் அருகே அந்த ஒற்றை யானை சுற்றி வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், கரூர் என அண்டை மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
பண்ணாரி அம்மன் கோவில் அருகே சோதனை சாவடி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒற்றை யானை ஒன்று அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றி வருகிறது.
வனத்துறையினர் பட்டாசை வைத்து விரட்டினாலும் சிறிது நேரம் மீண்டும் சாலையோரம் வந்து விடுகிறது. காலை, மாலை, இரவு நேரம் என பண்ணாரி அம்மன் கோவில் அருகே அந்த ஒற்றை யானை சுற்றி வருகிறது. இதனால் பண்ணாரி அம்மன் கோவில் செல்லும் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதைப்போல் வனப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதியில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் உணவு தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வாகனங்களை வழிமறிப்பது, கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதை ஆகி வருகிறது.
தற்போது பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. எனவே கோவில் செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக வனப்பகுதிக்குள் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அந்த ஒற்றை யானையின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றனர்.