உள்ளூர் செய்திகள்

தென்காசி அருகே தலை துண்டித்து கொலை: 4 பேர் கைது- விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
- தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு தப்பி ஓடியது.
- டிஜிட்டல் பேனர் வைப்பதில் நடைபெற்ற மோதலில் கொலை.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த குமாரசாமி என்பவரது மகன் குத்தாலிங்கம் (வயது 36). இவரது மனைவி தனலட்சுமி (வயது 30),
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இவர் தனது மனைவியின் ஊரான கீழப்புலியூர் பகுதியில் கார்மெண்ட்ஸ் மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் குத்தாலிங்கம் கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடையில் தனது மனைவியுடன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். இருவரும் ரேஷன் கடை அருகில் நின்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் கையில் அரிவாளுடன் மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்து குத்தாலிங்கத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இதை கண்முன்னே பார்த்துக் கொண்டிருந்த அவரது மனைவி தனம் துடிதுடித்த நிலையில் கணவரை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் அவரை வெட்டி, தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
பட்டப்பகலில் ரேஷன் கடை வாசலில் மனைவி மற்றும் பல பேர் முன்னிலையில் ஒரு நபரை வெட்டிக்கொலை செய்து விட்டு தலையை துண்டித்து கையில் எடுத்துக் கொண்டு ஒரு கும்பல் தப்பிச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து அந்த கும்பல் துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு காசிமேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியில் வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குத்தாலிங்கத்தின் உடலையும், காசி மேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியில் இருந்த தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்திய போது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காசிமேஜர்புரம் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் டிஜிட்டல் பேனர் வைப்பதில் நடைபெற்ற மோதலில் பட்டுராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இவரது தம்பி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடைபெற்று இருப்பதாகவும், பட்டுராஜனை கொலை செய்த பகுதியான காசிமேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியான அதே இடத்தில் குத்தாலிங்கத்தின் தலையை வைத்துவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராமசுப்பிரமணியன் என்ற ரமேஷ் (25), ஹரிகர சுதன் (24) ஆகிய 2 பேர் குற்றாலம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது கொலையில் தொடர்புடைய செண்பகம் (40), மணி என்ற புறா மணி (25) ஆகிய 2 பேர் திருச்செந்தூரில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று செண்பகம், மணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கைதான ராமசுப்பிரமணியன் என்ற ரமேஷ், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்ட பட்டுராஜாவின் மனைவியின் தம்பி ஆவார். இவர் காசிமேஜர்புரம் பகுதியில் ஆட்டு மந்தை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ஆட்டு மந்தையில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்த போது மர்ம நபர் ஓடுவது போல தென்பட்டதாகவும், இதனால் தன்னை கொலை செய்ய தான் யாரோ வந்திருக்கிறார்கள் எனவும் ரமேஷ் கருதி உள்ளார்.
இந்நிலையில், குத்தாலிங்கம் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் ஆடு வெட்டுவது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்த ரமேஷ், குத்தாலிங்கத்தால் தனது உயிருக்கு ஆபத்து வரும் எனக் கருதி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சித்தப்பாவான செண்பகம் மற்றும் சித்தப்பா மகனான ஹரிகர சுதன் ஆகியோரிடம் கூறியதாகவும், அதைத் தொடர்ந்து குத்தாலிங்கத்தை கொலை செய்ய அவரது நண்பரான புறா மணியையும் அழைத்துக்கொண்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.