உள்ளூர் செய்திகள்

பங்குனி உத்திர திருவிழாவில் மாங்கல்யம் சுற்றி பூஜிக்கப்பட்ட தேங்காய் ரூ.52 ஆயிரத்துக்கு ஏலம்
- மண விழாவில் பூஜிக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது.
- பழனியாண்டவர் குடும்பத்தினர் தேங்காயை ஏலம் எடுத்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் 350 ஆண்டுகள் பழமையான சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணத்தில் திருமாங்கல்யம் சுற்றப்பட்டு வைத்திருந்த தேங்காய் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மண விழாவில் பூஜிக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ரூ.5 ஆயிரத்தில் தொடங்கிய ஏலம் படிப்படியாக உயர்ந்து ரூ.52 ஆயிரத்தில் நிறைவடைந்தது.
போடி குளாளர் பாளையத்தைச் சேர்ந்த பழனியாண்டவர் குடும்பத்தினர் நீண்ட போட்டிக்கு பின்பு அந்த தேங்காயை ஏலம் எடுத்தனர். கடந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் ஒரு தேங்காய் ரூ.30 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டு அதை விட ரூ.22 ஆயிரம் கூடுதலாக ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூஜிக்கப்பட்ட இந்த தேங்காயை தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்டால் ஐஸ்வர்யம் பெருகுவதுடன் குடும்ப ஒற்றுமை, வியாபார விருத்தி உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.