உள்ளூர் செய்திகள்

கட்டிலில் படுத்து தூங்கிய என்ஜினீயர் உயிரோடு எரித்துக்கொலை- மர்ம நபர்கள் வெறிச்செயல்
- திறந்த வெளியில் கட்டில் போட்டு தூங்கி உள்ளார்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தா.பேட்டை சேந்தமங்கலம் அம்பாய் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியரின் மகன் கோபிநாத் (வயது 26). டிப்ளமோ பட்டதாரி.
தாயும் மகனும் வேலம்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல் கோபிநாத் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார்.
வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டின் முன்பு திறந்த வெளியில் கட்டில் போட்டு தூங்கி உள்ளார். தாய் வீட்டுக்குள் படுத்து உறங்கினார்.
நள்ளிரவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் கோபிநாத் உடலின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதில் தீ உடல் முழுவதும் பரவி, உடல் கருகி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இது எதுவும் தெரியாமல் அவரது தாயார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இன்று காலை எழுந்து பார்த்தபோது, மகன் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பது கண்டு அலறி துடித்தார்.
பின்னர் இது குறித்து தாப்பேட்டை போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்த துணை போலீஸ் பிரண்டு சுரேஷ்குமார், தா.பேட்டை இன்ஸ்பெ க்டர் அனந்த பத்மநாபன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி மற்றும் போலீ சார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
பின்னர் மோப்பநாய் உதவியுடன் விசாரணை தொடங்கப்பட்டது. அது சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்று நின்று விட்டது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? எதுவும் உடனடியாக தெரியவில்லை.
இது குறித்து தாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறார்கள்.
வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கிய பட்டதாரி வாலிபர் உயிருடன் எரித்து கொலை செய்யப் பட்ட சம்பவம் தா.பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.