உள்ளூர் செய்திகள்

மகாளய அமாவாசை: டெல்டா மாவட்ட நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்
- பல்வேறு பகுதிகளில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
- காவிரி சங்கமிக்கும் பூம்புகார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
தஞ்சாவூர்:
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
மாதம்தோறும் வரும் அமாவாசை அன்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே உள்ளது.
அதன்படி இன்று மகாளய அமாவாசை என்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட நீர்நிலைகளில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் மகாளய அமாவாசையையொட்டி அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் குவிய தொடங்கினர். ஆற்றில் புனித நீராடிவிட்டு காவிரி புஷ்யமண்டப துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். பின்னர் ஐயாறப்பர் கோவிலில் சென்று சம்ஹார மூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தஞ்சையில் கல்லணை கால்வாய் படித்துறையிலும் திரளான பொதுமக்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கும்பகோணம் மகாமகக்குள கரையிலும் மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடலிலும், கோடியக்கரை ஆதிசேது கடலிலும், வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மணிக்கர்ணிகை தீர்த்தத்திலும் புனித நீராடி வழிபட்டனர்.
பச்சரிசி, எள், காய்கறிகள், அகத்திக்கீரை உள்ளிட்ட பொருட்களை வைத்து திதி, தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடினர். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள மணிக்கர்ணிகையை தீர்த்தத்தில் இருந்து மோட்டார் மூலம் பக்தர்கள் மீது நீர் தெளிக்கப்பட்டது. அமாவாசையை ஒட்டி வேதாரண்யம் காவல்துறையினர், கடலோர காவல் நிலைய காவலர்கள், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் வேதாரணயம் கோடிக்கரைக்கு பல்வேறு பகுதிகளில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
காவிரி சங்கமிக்கும் பூம்புகார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.