உள்ளூர் செய்திகள்

சத்தியமங்கலம் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை
- வெங்கடேஷ் பெங்களூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வடுகபாளையம், ஸ்ரீ கார்டன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், ஒரு மகளும், வெங்கடேஷ் (வயது 22) என்ற மகனும் உள்ளனர்.
வெங்கடேஷ் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியின் இன்டென் சிப் மூலமாக கடந்த ஒன்றரை வருடமாக வெங்கடேஷ் பெங்களூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் வெங்கடேஷ் வேலை செய்யும் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடந்து வருகிறது. இதனால் தன்னையும் வேலையை விட்டு நீக்கி விடுவார்களோ என்ற பயத்தில் வெங்கடேஷ் இருந்துள்ளார். இது குறித்து தனது தந்தையிடம் கூறி மனம் வருந்தி உள்ளார். அதற்கு அவர் தந்தை இந்த நிறுவனம் இல்லை என்றால் வேறு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று மகனுக்கு ஆறுதல் கூறி வந்தார்.
இந்நிலையில் வெங்கடேஷ் பெங்களூரில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அன்று காலை வெங்கடேஷ் சத்தியமங்கலத்தில் தான் தங்கியிருக்கும் அறைக்கு சென்று தங்கி விட்டு தேர்வு எழுதி வருகிறேன் என்று கூறிவிட்டு காரை எடுத்து சென்றுள்ளார். இதையடுத்து வெங்கடேஷ் தன்னுடன் படிக்கும் கவுதம் என்பவருக்கு போன் செய்து சத்தியமங்கலம்-அத்தாணி மெயின் ரோட்டு அருகே உள்ள ஒரு பேக்கரி கடையில் இருக்கிறேன் நீ இங்கு வா என்று கூறியுள்ளார்.
அதன் பேரில் கவுதம் அங்கு சென்றார். அப்போது வெங்கடேஷ் சோர்வுடன் இருந்துள்ளார். இதுகுறித்து கவுதம் கேட்டபோது ஒன்று மில்லை என்று கூறிவிட்டார். பின்னர் வெங்கடேஷ், கவுதமை தனது காரில் அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்தபோது திடீரென வெங்கடேஷ் ரத்த வாந்தி எடுத்து உள்ளார்.
இதுகுறித்து கேட்டபோது வேலை போய்விடும் என்ற பயத்தில் தான் விஷம் குடித்து விட்டதாகவும், தனக்கு மயக்கம் வருவது போன்று இருப்பதாகவும் கூறினார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் வெங்கடேசை அழைத்து கொண்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்து வெங்கடேசை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். பின்னர் அவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வெங்கடேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.