உள்ளூர் செய்திகள்

தடை செய்யப்பட்ட தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு- ஆய்வுக்கு சென்றபோது 7 பேர் தப்பி ஓட்டம்
- போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஏழு பேரையும் தேடி வருகின்றனர்.
- பட்டாசுகளையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் அரசின் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகிறது. அதேபோல் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக செயல்படும் பட்டாசு ஆலைகளால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில், துலுக்கன்குறிச்சி பகுதியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை தனித் தாசில்தார் திருப்பதி, கிராம நிர்வாக அலுவலர் அருண் குமார் ஆகியோருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
முன்னதாக துலுக்கன்குறிச்சியில் உள்ள மஞ்சுநாத் குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற் சாலை கடந்த 2020-ல் பட்டாசு வெடி விபத்து காரணமாக பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு உரிமத்தை மீண்டும் புதுப்பிக்காமல் அந்த தொழிற்சாலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.
அதிகாரிகள் ஆய்வின் போது அங்கு, பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த வெம்பக்கோட்டை மற்றும் விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார் (வயது 36), மதன்குமார் (32), செந்தமிழ் வெற்றி பாண்டியன் (40), இளஞ்செழியன் (40), மணிகண்டன் (38), விஜயகுமார் (40), மஞ்சுநாத் குமார் (40) ஆகியோர் வருவாய்த் துறையினர் ஆய்வுக்கு வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து துலுக்கன் குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார், வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஏழு பேரையும் தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் பட்டாசு தயாரித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பேன்சி ரகவெடிகள், சோல்சா வெடிகள், மேலும் முழுமையடையாத பட்டாசுகளையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.