உள்ளூர் செய்திகள்

துறையூரில் இளம்பெண் அதிகாரியிடம் நட்பாக பழகி ரூ.7 லட்சம் நகை, பணம் மோசடி- வாலிபருக்கு போலீஸ் வலை
- பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் திவ்ய பிரியாவின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் திவ்யப்பிரியா (வயது31). இவர் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் கால்நடை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
துறையூர் அசோக் நகரை சேர்ந்தவர் மகிசுகந்த் (31). இவர்கள் இருவரும் பள்ளிக் காலம் முதல் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் மகிசுகந்த் தான் வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அதனால் பணம் கொடுத்து உதவுமாறும் திவ்ய பிரியாவிடம் கேட்டார்.
இதனை தொடர்ந்து அவர் ரூ. 1 லட்சத்து இருபதாயிரம் ரொக்கப் பணம் மற்றும் சுமார் ரூ.5 லட்சத்து 50ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை மகிசுகந்திடம் கொடுத்துள்ளார்.
பின்னர் வெளிநாடு சென்ற மகிசுகந்த் அங்கு தங்கி பணி புரியாமல் சில நாட்களிலேயே இந்தியா திரும்பினார்.
இதனை தொடர்ந்து கொடுத்த பணத்தை திவ்யப்பிரியா, மகி சுகந்திடம் கேட்டார்.
ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். மேலும் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் திவ்ய பிரியாவின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட திவ்யபிரியா துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதோடு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த மகி சுகந்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்த அவர் தலைமறைவானார். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். துறையூரில் பெண் அதிகாரியிடம் நட்பாக பழகிய வாலிபர் நகை, பணத்தை மோசடி செய்து தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.