இந்தியா

ஒரே வீட்டில் 4,271 வாக்காளர்கள்.. உத்தரப் பிரதேச வாக்காளர் பட்டியலில் குளறுபடி
- இது அந்த கிராமத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் கால் பங்காகும்.
- ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் உள்ள வீடுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென இரட்டிப்பாகியுள்ளது
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் மோசடி குறித்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2026 பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டபோது, மெஹபூபா மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் ஒரே முகவரியின் கீழ் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ஜெய்த்பூர் கிராம பஞ்சாயத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில், வீட்டு எண் 803 இல் 4,271 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது அந்த கிராமத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் கால் பங்காகும். வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று சோதனை செய்தபோது பிழை கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல ஜெய்த்பூருக்கு அருகிலுள்ள பன்வாரி நகரில், 996 ஆம் எண் வீட்டில் 243 பேரும், 997 ஆம் எண் வீட்டில் 185 பேரும் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐந்து அல்லது ஆறு உறுப்பினர்கள் உள்ள வீடுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென இரட்டிப்பாகியுள்ளது
இருப்பினும், மாவட்ட உதவித் தேர்தல் அதிகாரி ஆர்.பி. விஸ்வகர்மா, வாக்காளர்களின் பெயர்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும், முகவரிகள் மட்டுமே தவறாக உள்ளிடப்பட்டுள்ளன என்றும், அந்தத் தவறுகள் சரி செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தரவு உள்ளீட்டில் ஏற்பட்ட பிழை மற்றும் கிராம மக்களின் தெளிவற்ற பதிவுகள் இதற்குக் காரணம் என்று விஸ்வகர்மா தெரிவித்தார்.
இருப்பினும், எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.