இந்தியா

சைபர் மோசடி: டிஜிட்டல் கைது அழுத்தத்தில் மாரடைப்பால் உயிரை விட்ட மருத்துவர்
- உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டினர்.
- மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டிஜிட்டல் கைது மோசடிக்கு ஆளான ஓய்வுபெற்ற மருத்துவர் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 76.
செப்டம்பர் 6 ஆம் தேதி மருத்துவருக்கு ஒரு வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. மோசடி செய்பவர்கள் மருத்துவர் மனித கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, பெங்களூரு காவல்துறையின் லோகோவைக் காட்டி அவரை மோசடிக்காரர்கள் நம்ப வைத்துள்ளனர்.
பின்னர், உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டிய மோசடி செய்பவர்கள் அவரது ஓய்வூதியக் கணக்கிலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஷெல் கணக்கிற்கு ரூ.6.6 லட்சத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தினர்.
பணம் செலுத்தப்பட்ட பிறகும், வீடியோ அழைப்புகள் மற்றும் போலி நீதிமன்ற அறிவிப்புகள் மூலம் மிரட்டல் தொடர்ந்தது.
இரண்டு நாட்கள் தொடர்ந்து அழுத்தத்திற்கு ஆளான அவர் ஒரு கட்டத்தில் அவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.
குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஐடி சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.