இந்தியா

வெளிநாடு டூர்கள், ஐபோன்கள்.. ஏழை மாணவிகளை வலையில் வீழ்த்த டெல்லி சாமியாரின் பலே உத்திகள்
- தேர்ந்தெடுக்கப்படட்ட மாணவிகளிடம் பெண் ஆசிரியைகள் பேசி அவர்களை சுவாமியின் ஆபீசுக்கு அல்லது அறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
- இந்த பெண் ஆசிரியர்களில் சிலர் ஏற்கனேவே அக்கல்லூரியில் பயின்று சாமியாரின் வலையில் விழுந்த முன்னாள் மாணவிகளே ஆவர்.
டெல்லியில் பிரபல சாமியாராக வளம் வந்த சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி ஆகியுள்ளார்.
வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆசிரமத்தின் இயக்குனராக இருந்த அவர் மீது, ஆசிரமத்தின் கீழ் இயங்கும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பயின்று வந்த 17 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு (EWS) ஸ்காலர்ஷிப் உடன் முதுநிலை டிப்ளமோ பயின்று வந்த அம்மாணவிகளை அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தனது இச்சைக்கு இணங்க வைக்க பல்வேறு வழிகளில் முயன்றுள்ளார்.
சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் தங்களை கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீஸ், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் உள்பட பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதாயறிந்த சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சாமியார் எவ்வாறு மாணவிகளை கட்டாயப்படுத்தினார் என்பது குறித்து அந்த கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாணவர் ஒருவர் முன்வந்து பொதுவெளியில் பேசியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சாமியார், மாணவிகளை இலவசமாக வெளிநாட்டு பயணம், ஐபோன்கள், சொகுசு கார்கள், லேப்டாப்களை வழங்குவதாக அட்மிஷன் போடும் சமயத்தில் இருந்தே ஆசை காட்டத் தொடங்குவார்.
புதிய மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து வகுப்புகளுக்கு வரத் தொடங்கியதும் அவர்களில் யாரை குறிவைப்பது என்ற செயல்முறை தொடங்கும்.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதிக மதிப்பெண்கள், வெளிநாட்டு இண்டர்ன்ஷிப் வாய்ப்புகள், பெரிய நிறுவனங்களில் பிளேஸ்மென்ட் வாய்ப்புகள் ஆகியவை வழங்கப்படும். இதை ஏற்று ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை கல்லூரியில் ஒவ்வொரு நாளும் கடினமானதாக மாறும்.
இந்த மாணவிகள் இரவு தங்குவதற்கு கட்டப்படுத்தப்படுவர். யாருடன் பேச அனுமதிக்கப்படாமல் 24 மணிநேரமும் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.
இருந்தும் அடம் பிடிக்கும் சில பெண்கள் காட்டமாக நடத்தப்பட்டு கல்லூரியில் இருந்தே நீக்கப்படுவார்கள். அந்த பெண்களின் பெற்றோர்களுக்கும் அழுத்தம் தரப்படும்.
பெண்களை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் என்று கேட்டால், சைத்னயானந்த சரஸ்வதியே தனிப்பட்ட முறையில் இந்த செயல்முறையில் ஈடுபடுவார்.
ஒவ்வொரு மாணவியிடமும் தனித் தனியே சுவாமி பேசுவார். இதன் பின் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவரே சில சமயம் பாடம் பெண்களுக்கு தனியே பாடம் எடுக்க வருவார்.
இந்த சமயத்திலும் அவர் தனக்கேற்ற மாணவிகளை தேர்ந்தெடுப்பார். இதன் பின் சுவாமியால் தேர்ந்தெடுக்கப்படட்ட மாணவிகளிடம் பெண் ஆசிரியைகள் பேசி அவர்களை சுவாமியின் ஆபீசுக்கு அல்லது அறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
இந்த பெண் ஆசிரியர்களில் சிலர் ஏற்கனேவே அக்கல்லூரியில் பயின்று சாமியாரின் வலையில் விழுந்த முன்னாள் மாணவிகளே ஆவர். அவர்கள் சாமியார் அளித்த வெளிநாடு பயணம் உள்ளிட்ட சலுகைகளை ஏற்றுக்கொண்டவர்கள்.
2016 லேயே சாமியார் மீது ஒரு ஜூனியர் மாணவி போலீசில் புகார் அளித்தார். ஆனால் பின்னர் சாமியாரின் தரப்பு வெளிநாட்டில் வேலை, unlimited ஷாப்பிங் ஆகிய ஆசை காட்டி அவரை சமரசம் செய்ய முயன்றனர்.
அந்த பெண்ணை ஹாஸ்டலில் அடைத்து வைத்து யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் செய்தனர்.
அப்பெண்ணை சாமியாருடன் 2 நாள் மதுரா பயணம் மேற்கொள்ள நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினர். அந்த பெண் பயந்து தனது வீட்டுக்கு ஓடிச் சென்றார். ஆனால் சாமியாரின் ஆட்கள் வீட்டுக்கு சென்று அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். பெண்ணின் தந்தை தலையிட்டதை அவர்கள் அங்கிருந்து அகன்றனர்.
மாணவிகளின் ஒரிஜினல் டாகுமெண்ட்களை அட்மிஷனின் போதே வாங்கி வைத்துக்கொள்வார்கள். இதை வைத்து சாமியார் மாணவிகளை மிரட்டுவார். கல்லூரியில் உள்ள 170 சிசிடிவி கேமராக்களும் சாமியாரின் நேரடி கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அவர் மீது தற்போது எழுந்துள்ள அனைத்து புகார்களும் முற்றிலும் உண்மை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சாமியார் பல அரசியல்வாதிகளுடன் இருப்பதுபோல் போலி புகைப்படங்களை வைத்துக்கொண்டும், சொகுசு கார்கள் வைத்துக்கொண்டும், தன்னை அமெரிக்க தூதர் என கூறிக்கொண்டும் ஏமாற்றி வந்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.