இந்தியா

டேட்டிங் செயலியால் சிக்கிய சிறுவன்: 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்
- சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது.
- அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருவனந்தபுரம்:
செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்ட தற்போதைய காலகட்டத்தில், செல்போனில் பயன்படுத்தக்கூடிய ஏராளமான செயலிகளும் வந்துவிட்டன. அவற்றில் "ஆபாச சாட்டிங்" தொடர்பான செயலிகளும் ஏராளமாக இருக்கின்றன.
அதுபோன்ற செயலியை பயன்படுத்தி பணத்தை இழப்பவர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இந்த நிலையில் கேரளாவில் "டேட்டிங் செயலி" பயன்படுத்திய சிறுவன் ஒருவன், பல நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் நடந்திருக்கிறது.
14 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவன், சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்திருக்கிறான். அப்போது அந்த சிறுவனுக்கு "டேட்டிங் செயலி" மூலமாக சிலருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த நபர்கள், சிறுவனை வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக பலரால் சிறுவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறான். சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கண்டுபிடிக்க 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் விசாரணை நடத்தியதில் சிறுவனை காசர்கோடு, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை சேர்ந்த பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.
அவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, மேலும் பலரால் சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
இதனால் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டேட்டிங் செயலியை பயன்படுத்திய சிறுவன், பலரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.