இந்தியா

பள்ளிக்கு நடந்து சென்றபோது பாதாள சாக்கடை குழியில் விழுந்த சிறுமி- அதிர்ச்சி வீடியோ
- மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் மூடியை திறந்து குப்பைகளை அகற்றினர்.
- தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், மவுலா கா சில்லாவை சேர்ந்தவர் முகமது சல்மான். இவரது மகள் ஜெனப் (வயது 3). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி படித்து வருகிறார்.
மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் மூடியை திறந்து குப்பைகளை அகற்றினர். வேலை முடிந்த பிறகு பாதாள சாக்கடை குழியை மூடாமல் சென்றனர்.
நேற்று காலை ஜைனப் தனது தாயுடன் பள்ளிக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்தார். இதனைக் கண்ட அவரது தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை பாதாள சாக்கடையில் இருந்து காயம் எதுவும் இன்றி பத்திரமாக மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த வீடியோவை கண்ட மாநகராட்சி அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமிக்கு காயம் ஏதாவது ஏற்பட்டதா என விசாரணை நடத்தினர். மேலும் தவறு செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.