இந்தியா

"ஐ லவ் முஹமது": வட மாநிலங்களில் வெடித்த சர்ச்சை - உ.பி.யில் 1700 வழக்குகள் பதிவு - மதத்தலைவர் கைது
- பதிலுக்கு 'ஐ லவ் மகாதேவ்' பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பேரணி நடைபெற்றது.
இந்த மாத தொடக்கத்தில் மீலாதுன் நபியை முன்னிட்டு உத்தர பிரதேசத்தின் கான்பூரில் 'ஐ லவ் முஹமது' (I Love Mohammad) என்ற பேனர் வைக்கப்பட்டது சர்ச்சையானது.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்ததே சர்ச்சைக்கு காரணம். இதைத்தொடர்ந்து உத்தர பிரதேசம் மற்றும் நாட்டின் பல நகரங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு இந்து அமைப்பினர் 'ஐ லவ் மகாதேவ்' பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
''ஐ லவ் முஹமது' என்பது குற்றமா என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் உ.பி.போலீசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக பல்வேறு நகரங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
'ஐ லவ் முஹமது' பதாகைகள், சுவரொட்டிகள் தொடர்பாக கடந்த சில வரங்களாகவே வட மாநிலங்களில் இந்து குழுக்களுக்கும் இஸ்லாமிய குழுக்களுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் சிலர் போலீசார் மீது கற்களை வீசியதால் வன்முறை ஏற்பட்டது. போலீசார் பேரணியை கலைக்க தடியடி நடத்தினர். இதில் ஏற்பட்ட மோதலில் 10 போலீசார் காயமடைந்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்தது.
இதுவரை, எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த தொடர் போராட்டங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் காவல்துறையினரைத் தாக்குதல் மற்றும் கலவரத்தில் ஈடுபடுதல் போன்ற பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது மொத்தம் 1700 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றைய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்த உள்ளூர் மதத்தலைவரும் இத்தேஹாத்-இ-மில்லத் கவுன்சில் தலைவருமான தௌகிர் ராசாவை போலீசார் இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர்.
ஐ லவ் முஹம்மது' பிரச்சாரத்தை ஆதரித்து அவர் செய்த வீடியோ அழைப்பிற்குப் பிறகே நிலைமை பதற்றமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.