இந்தியா

பிரதமர், முதல் மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதா: எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பது ஏன்?
- பிரதமர், முதல் மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை எதிர்க்கட்சிகள் கிழித்தெறிந்தனர்.
- டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இதுவரை குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளை மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்ற நடைமுறை இருந்து வந்தது.
கடுமையான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்படும் பிரதமர், மத்திய மந்திரிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல் மந்திரிகள், அமைச்சர்கள் ஆகியோர் தொடர்ந்து 30 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டால், 31வது நாளில் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவி தானாகவே பறிக்கப்படும் என்ற புதிய சட்டத்திருத்த மசோதாவை உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்தப் புதிய மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்ட பின்னரும் சுமார் 6 மாத காலம் சிறையில் இருந்தபடியே டெல்லி அரசை வழிநடத்தினார்.
இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடைபெறாமல் இருப்பதை தவிர்க்கவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.